சிங்கள பெரும்பான்மை பிரதேசங்களில் தமிழர்கள் புறக்கணிப்பு : ஜீவன் தொண்டமான் குற்றச்சாட்டு

சிங்கள சமூகம் எங்கெல்லாம்  அதிகமாக வாழ்கின்றதோ  அங்கெல்லாம் பிரதேச செயலாளர்கள் தமிழ் மக்களை புறக்கணிக்கின்றார்கள். இதுதான் உண்மை. இது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்ற  அனர்த்த நிவாரணங்களுக்கான குறை நிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகோண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

கடந்தவாரம் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சில சிவில் அமைப்புகள் ஒரு கலந்துரையாடலை ஏற்படுத்தினார்கள். அவர்கள் ஒரு முன்மொழிவை தயாரித்து சமர்ப்பித்தார்கள்.  புயல், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வு, தீர்வு தொடர்பான முன்மொழிவே அது. அதனை இந்த சபையில் நான் சமர்ப்பிக்கின்றேன்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக எங்களால் முடிந்த உதவியாக எம்மால் சேகரிக்கப்பட்ட  60 இலட்சம் ரூபா பணத்தில் பாதிக்கப்பட்ட 2137 குடும்பங்களுக்கு நாம்  உதவி செய்துள்ளோம். இதற்கு உதவியவர்களுக்கு இந்த சபையில் நன்றி கூறுகின்றேன்.எமது உதவி தொடர்பான கணக்கு விபரங்களையும் இந்த சபையில் சமர்ப்பிக்கின்றேன். என்றாலும் நாம்செய்த  இந்த உதவி போதாது.

கடந்த பாராளுமன்ற அமர்வில் கொத்மலையில் நடந்த அசாதாரண சம்பவம் தொடர்பில் நான் உரையாற்றினேன்.அதில் முக்கியமானதொரு பிரச்சினையாக  அந்த பகுதியிலிருந்த பிரதேச செயலாளர் சரியான நடவடிக்கை எடுக்கவில்லையென்ற விடயத்தை முன்வைத்தேன். இது தொடர்பில் அரசு. அமைச்சர்கள் அல்லது எம்.பி.க்கள்  நடவடிக்கை எடுப்பார்கள் என நம்பினேன். ஆனால் நான் கூறியபோதிருந்ததை விட  இப்போது அந்த பிரச்சினை அதிகரித்துள்ளது . நேற்றைய தினம் ( வியாழக் கிழமை)அதே பகுதியிலிருக்கின்ற மக்கள் சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாகவே  அந்த பிரதேச செயலாளர் தம்மை முழுமையாக நிராகரிப்பதாக கூறியுள்ளார்கள்.

நான் எனது பாராளுமன்ற நாட்களில் ஒரு உரையைக்கூட இனரீதியாக ஆற்றியதில்லை. ஆனால் இன்று உண்மையான விடயம் கொத்மலை பிரதேசம் மட்டுமல்ல கொத்மலை, உடப்புசல்லாவ என சிங்கள சமூகம் எங்கு அதிகமாக வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் பிரதேச செயலாளர்கள் தமிழ் மக்களை புறக்கணிக்கின்றார்கள். இதுதான் உண்மை.

இது தொடர்பாக அரசாங்கம் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்று நன் அந்த குற்றச்சாட்டை  வைத்தமைக்கு காரணம் பாதிக்கப்பட்ட மக்கள் அந்த குற்றச்சாட்டை  பாராளுமன்றத்தில் முன்வைக்க சொன்னார்கள். நான் அந்த குற்றச்சாட்டை முன்வைத்ததால் இன்று அங்குள்ள தமிழ் சமூகம் ஒட்டு மொத்தமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதே நிலைமைதான் அனைத்துப்பகுதிகளிலும் நடந்து கொண்டிருக்கின்றது.

இது அமைச்சரின் நோக்கம் கிடையாது. எனவே தயவு செய்து இது தொடர்பில் நடவடிக்கை எடுங்கள். எல்லோரும் மோசமானவர்கள் என நான் சொல்லவில்லை. ஒரு சிலரின் செயற்பாடுகளினால் அரசாங்கத்துக்கு மட்டும் கெட்ட பெயர் கிடையாது. நாட்டுக்கே கெட்ட பெயர் .அதேமாதிரி கிராமசேவகர்களைப் பார்த்தால் அவர்கள் நிறைய இடங்களுக்கு பெயருக்கே செல்கின்றார்கள். பெயர்களை எடுக்கின்றார்கள்  .ஆனால் எதுவும் செய்ய மாட்டேன் என்கின்றார்கள்.

9 ஆம் திகதி நுவரெலியா மாவட்டத்தில் அபிவிருத்திக்  குழுக் கூட்டம் நடந்தது அதில் ஜனாதிபதி  ஒன்றரை இலட்சம் மக்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு 9 இலட்சம் பேர்ச் காணி தேவைப்படுவதாகவும் கூறியிருந்தார். அப்படிப்பார்த்தால் ஒரு குடும்பத்துக்கு 6 பேர்ச்  காணிதான். திகாம்பரம் எம்.பி. இருக்கும்போது 7 பேர்ச் காணி என சட்டம் கொண்டுவரப்பட்டது.நாங்கள்  இருக்கும்போது 10  பேர்ச் காணி என சட்டம் கொண்டு வரப்பட்டது.இப்போது 6 பேர்ச் எனப்படுகின்றது எனவே இதுதொடர்பில் தனது நிலைப்பாடு என்னவென ஜனாதிபதி இந்த சபையில் தெளிவு படுத்தியேயாக வேண்டும்.

அதேவேளை சந்தாப்பணத்தில் நான் நிவாரணம் வழங்குவதாக கூறினார்கள். நாமல் ராஜபக்ஷ்வோடு நான் சென்ற போது அவருடன் கூட்டு சேர்ந்து விட்டதாக கூறினார்கள். எல்லோரும் சந்தாப்பணம் வாங்குகின்றார்கள்.எத்தனைபேர் கணக்கு வழக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்கள் ? ஆனால் நான் சமர்ப்பித்துள்ளேன். நான் அனைத்து கட்சித்தலைவர்களிடமும் நுவரெலியா மாவட்டம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, முடிந்த உதவிகளை செய்யுங்கள் எனக்கூறினேன். எனக்கு ஆளும் கட்சியா எதிர்கட்சியா, சிவில் அமைப்புக்களா என்ற பிரச்சினை கிடையாது. அந்த வகையில்தான் நாமல் ராஜபக்ஷ் அங்கு வந்து உதவிகளை வழங்கினார் என்றார்.