”டித்வா ”புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான 500 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த பிரேரணை வெள்ளிக்கிழமை (19) விவாதத்திற்கு எடுப்பட்ட நிலையிலேயே வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது .
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் டிசம்பர் 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போதிலும், அண்மையில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தொகைகளுக்கு மேலதிகமாக கூடுதல் நிதி திரட்டவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது. இதற்கமைய பாதிக்கப்பட்ட மக்களை வலுவூட்டுவதற்கும், அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் 500 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்புபிரேரணை முன்மொழியப்பட்டது.
இந்த குறைநிரப்புத் தொகையில் 10000 கோடி ரூபா அனர்த்தத்தினால் சேதமடைந்த வீடுகளை மீண்டும் புனரமைப்பதற்கும், 25000 கோடி ரூபா சேதமடைந்த உட்கட்டுமான வசதிகளை மீளக்கட்டியெழுப்புவதற்கும், 15000 கோடிரூபா பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக்கட்டியெழுப்புவதற்கும் பயன்படுத்தப்படவுள்ளன.



