பாகிஸ்தானிலிருந்து 200 தொன் அனர்த்த நிவாரண பொருட்கள் கையளிப்பு!

பாகிஸ்தானிலிருந்து 200 தொன் அனர்த்த நிவாரண பொருட்கள் இலங்கை அரசாங்கத்திடம் இன்று திங்கட்கிழமை  (15) கையளிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான்  தூதுவர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமரின் விசேட பணிப்புரைகளைத் தொடர்ந்து, இலங்கைக்கு தொடர்ச்சியாக அனர்த்த நிவாரண பொருட்கள் மற்றும் சேவைகள் கையளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்புறவும் வலுவான இருதரப்பு உறவுகளும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அனர்த்த நிவாரண சேவைக்காக பாகிஸ்தான் தமது விமானப்படையின் C-130 விமானங்களை அனுப்பியிருந்தது. மேலும், ‘தித்வா’ புயலின் போது, பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் ஒன்று, அதன் ஹெலிகொப்டருடன், இலங்கை ஆயுதப் படைகளுடன் நெருங்கி ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்றது.

அத்துடன், பாகிஸ்தான் பிரதமர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடி, உயிர் இழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, பாகிஸ்தானின் தொடர்ச்சியான ஆதரவுக்கான உறுதிப்பாட்டை மீளவும் வலியுறுத்தினார்.

பாகிஸ்தான் பிரதமரின் விசேட பணிப்புரையின் பேரில், பாகிஸ்தானின் மத்திய கடல்சார் விவகார அமைச்சர் முஹம்மது ஜுனைத் அன்வர் சௌத்ரி (Muhammad Junaid Anwar Chaudhry) இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்த கடந்த வாரம் இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.