இலங்கையில் டிற்வா சூறாவளியின் கோர தாண்டவம் தற்போது வரையில் 640 உயிரிழப்புக்களுக்கும் 211 காணாமல்போகும் நிலைமைகளுக்கும் காரணமாகியுள்ளது. அத்துடன் 473,138 குடும்பங்களைச் சேர்ந்த 1,637,960 பேர் பாதிப்புக்களைச் சந்தித்துள்ளதோடு நாடளாவிய ரீதியில் 847 இடைத்தங்கல் முகாம்களில் 82,813 பேர் இன்னமும் தங்கியிருக்கின்றனர்.
டிற்வா சூறாவளியின் தாக்கங்களின் கனதி யிலிருந்து மீள்வதற்கு கணிசமான காலமெடுக்கும் என்றநிலை இருக்கின்ற சூழலில் நாட்டில் 15000வரையிலான மண்சரிவு அபாயமுள்ள பகுதிகள் காணப்படுவதாகவும் வடகீழ் பருவப் பெயர்ச்சியால் ஜனவரி முதல்வாரம் வரையில் கனமழைக்குச் சாத்தியப்பாடுகள் உள்ளதாகவும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் பார்க்கின்றபோது இயற்கை பேரிடர் தொடர்கதையாகும் துரதிஷ்டவசமான சூழலே காணப்படுகின்றது. தற்போது கூட பதுளை மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள 14பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிக ளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனைவிவும் நாடளாவிய ரீதியில் 37 பிரதேச செயலாளர் பிரிவுகள் இரண்டாம் நிலை மண்சரிவு அபாயங்கள் உள்ள பகுதிகளாக அடையாளமிடப்பட்டுள்ளன. வட,கிழக்கு கன மழைக்குள் சிக்கும் நிலைமையும் அதிகமாக காணப்படுகின்றது.
இத்தகையதொரு சூழலில் தான் இலங்கை கடந்த இரண்டு தாசாப்தங்களில் சந்தித்த மிகப்பெரிய பேரழிவாக அனர்த்தத்தை இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரான்சே, 4 மாதகால ‘மனிதாபிமான முன்னுரிமையளிப்புத் திட்டத்தை’ அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
அத்துடன், 7பிரதான துறைகள் அனர்த்தத் தால் நலிவடைந்துள்ள நிலையில் அவற்றை மீட்டெடுப்பதற்கும் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம், மனிதாபிமான முன்னு ரிமை யளிப்புத் திட்டத்தினை நடைமுறைப் படுத்துவதற்கு அவசியமான 35.3 மில்லியன் டொலர்கள் நிதியைத் திரட்டுவதற்கு நன் கொடை உதவிகளை வழங்க முன்வருமாறு உலக நாடுகளுக்கும், சர்வதேச அமைப்புகளுக்கும், அபிவிருத்திப் பங்காளிகளுக்கும் பகிரங்க அழைப் பையும் விடுத்துள்ளார்.
தற்போதைய நிலையில், உலகளாவிய ரீதியில் 39இற்கும் மேற்பட்ட நாடுகளும், பல சர்வதேச நிதி நன்கொடையாளர்களும் சுயாதீன அமைப்புக்களும் இலங்கையின் மீள் எழுச்சிக்காக நிதிப்பங்களிப்பைச் செய்திருக்கின்றன.
அந்த வகையில் இலங்கையை மீளக் கட்டியெழுப்பல் நிதியமானது தற்போது வரை யில் 1893மில்லியன் ரூபாவை நன்கொடை யாகப் பெற்றுள்ளதாக திறைசேரி யின் செயலாளர் ஹர்சன சூரியப்பெரும உறுதிப் படுத்தியுள்ளார்.
அப்படியிருக்க, அனர்த்தங்கள் ஒரு நாட்டின் மனிதாபிமானப் பொறுப்பை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களாக அமைந்தாலும், சமகால உலக மயமாக்கல் சூழலில் அவை புவிசார் அரசியல் போட்டிக்கான களங்களாகவும் உருமாறுகின்றன.
இலங்கையின் அண்மைய டிற்வா சூறாவளிப் பேரழிவு மற்றும் அதற்கு முந்தைய பொருளாதார நெருக்கடி, இத்தீவின் கேந்திர முக்கியத்துவம் காரணமாக உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்ததுடன், உதவிகள் வழங்குவதிலும் குறிப்பிடத்தக்க போட்டியை வெளிப்படுத்தியிருக் கிறது.
குறிப்பாக, இந்தியப் பெருங்கடல் பிராந் தியத்தில் ஆதிக்கம் செலுத்த விளையும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப் போர் இந்த உதவிக் களத்திலும் தெளிவாகப் பிரதி பலித்தது.
2004 ஆம் ஆண்டின் சுனாமி அனர்த்தத்தின் போது, அமெரிக்கா தனது போர்க்கப்பல்கள், ஹெலிகொப்டர்கள், மற்றும் 1,500 வரையிலான படையினருடன் பாரியளவிலான மீட்புப் பணிக ளில் ஈடுபட்டது.
அப்போது அமெரிக்கா மீள்கட்டுமானப் பணிகளுக்காக கிட்டத்தட்ட 907 மில்லியன் டொலர்களை வழங்கியது. இதுவே அந்நாடுகளின் உடனடி மற்றும் நீண்டகால அக்கறையை வெளிப் படுத்தியது.
எனினும், டிற்வா சூறாவளிப் பேரழிவின் போது நாடுகளின் பிரதிபலிப்பில் குறிப்பிடத்தக்க மாற்றம் காணப்படுகிறது. இலங்கையின் கடந்தகால பொருளாதார நெருக்கடியின் போதும் இந்தியா சுமார் 4 பில்லியன் டொலர்களை வழங்கி பட்டினிச்சாவுகள் நிகழ்வதைத் தடுத்தது.
இந்நிலையில் டிற்வா சூறாவளியின் போதும் இந்தியா தனது ‘அயல்நாட்டுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கையை உறுதிப்படுத் தும் வகையில், ‘சாகர் பந்து’ என்ற பெயரில் பாரியளவிலான உதவி, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கையை உடனடியாக மேற்கொண்டிருக் கின்றது. இதற்கு காரணம் தமது தேசிய பாது காப்பை உறுதிப்படுத்துவதில் முக்கிய தீவு தேசமாகவுள்ள இலங்கை மீதான தங்களின் ‘பிடி’ தளர்ந்து விடக்கூடாது என்பதேயாகும் என்பது வெளிப்படையானது.
இந்தியக் கடற்படையின் ஐ.என்.எஸ். விக்ராந்த், ஐ.என்.எஸ். உதயகிரி, ஐ.என்.எஸ்.சுகன்யா போன்ற கப்பல்கள், செடெக் மற்றும் எம்.ஐ-17 ஹெலிகொப்டர்கள், மற்றும் சி-130, சி-17 போன்ற விமானப் படை விமானங்கள் அடுத்த டுத்து கொழும்பு மற்றும் திருகோணமலைத் துறைமுகங்களுக்கு நிவாரணப் பொருட்களையும், தற்காலிக இரும்புப் பாலங்களையும், மருத்துவக் குழுக்களையும் கொண்டு வந்தன.
கூடவே இந்தியப் படைகளும் இலகுவாக இலங்கைக்குள் பிரவேசித்தன. சுமார் 2000 மெற்ரிக் தொன் நிவாரணப் பொருட்கள் மற்றும் ஏராளமான ஆளணி, இராணுவ வளங்களின் பிரயோகம் ஆகியவை நெருக்கடியான சூழலில் இந்தியா இலங்கைக்குக் கைகொடுப்பதில் தாம் முன்னணியில் இருப்பதை உறுதிசெய்தது.
இந்தியாவின் இந்த வெளிப்பாடு முழுக்க முழுக்க சீனாவை விடவும் தாங்களே இலங்கையில் மேலாதிக்க நிலையை அடைந்திருப்பதை காண்பிப்பதே பிரதான நோக்கம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இது பூகோளப் போட்டியின் களத்தில் இந்தியாவுக்கு ஆறுதலான வொரு சூழலை தற்போதைக்கு உருவாக்கியுள்ளது.
இலங்கையில் அம்பாந்தோட்டைத் துறை முகம், கொழும்புத் துறைமுக நகரம் போன்ற பாரிய கேந்திர பொருளாதார நலன் களைக் கொண்டிருக்கும் சீனா, டிற்வா சூறா வளிப் பேரழிவின் போது தனது படைபலத்தையோ, விமானப்படையையோ மீட்பு நடவடிக்கைகளுக் காக உடனடியாக அனுப்ப வில்லை. அதன் உதவிப் பொருட்கள் கிட்டத்தட்ட 10 நாட்களுக்குப் பின்னரே விமானம் மூலம் வந்து சேர்ந்தன.
அப்படிப்பார்க்கின்றபோது சீனாவின் செயற்பாடுகள் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஒருவித ஆறுதலை உடனடியாக அளிப்பது போன்றிருக்கின்றது. ஏனெனில், இலங்கையில் கால்பதிப்பதற்கு சீனா சந்தர்ப்பம் பார்த்திருப்பதாக இந்தியா, அமெரிக்கா மத்தியில் அனுமானம் நீண்டகாலமாகவே உள்ளது.
அனர்த்த சூழலில் அவ்விதமான நிலைமை யொன்று தோற்றம்பெற்றிருக்கவில்லை. அதற் காக சீனா தனது பூகோள அரசியல் நலன்க ளில் இருந்து பின்வாங்கவில்லை. உடனடிப் பேரழிவுக்கான உதவிக் களத்தில் அது பதுங்கு வதைப் போன்றதொரு தோற்றம் தான் வெளிப் பட்டிருக்கிறது.
ஆனால் சீனா இம்முறை வித்தியாசமாக நிலைமைகளை கையாள்கிறது. குறிப்பாக அரசுக்கும், அரசுக்கும் இடையிலான இருதரப்பு உறவு என்ற அடிப்படையில் தான் செயற்படுகின் றது. அந்த வகையில் தான் சீனா, இலங்கை மக்களுக்கான நிவாரண உதவி முயற்சிகளுக்குப் பங்களிப்புச் செய்யும் வகையில் சீன அரசாங்கத் தினால் ஒரு மில்லியன் டொலர்கள் நிதியுதவியும், 10 மில்லியன் ஆர்.எம்.பி பெறுமதியான நிவாரணப்பொருட்களையும் வழங்கியது.
இலங்கையிலுள்ள வெளிநாட்டு சீன சங்கத்துடன் இணைந்து சீன வர்த்தக சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்பட்ட நன்கொடை சேகரிப்பு முயற்சியால் 10 மில்லியன் ரூபா நிதியும் வழங்கப் பட்டுள்ளது.
அதேவேளை சீன செஞ்சிலுவை சங்கத்தி னால் இலங்கை செஞ்சிலுவை சங்கத்துக்கு 100,000 டொலர்கள் உடனடி நிதியுதவியை வழங்கியது. இந்தச் செயற்பாடுகள், இருதரப்பு உறவு, சர்வதேச பங்காளர் ஆகிய இரு பாத்திரங்களை வெளிப் படுத்துவதாக உள்ளது.
இதன்மூலம், இலங்கையின் இறைமைக் குள் தாங்கள் தலையிடவில்லை என்ற தோற்றப் பாட்டை வெளிப்படுத்தி அமெரிக்கா, இந்தியா, உள்ளிட்ட ஏனைய மேற்குல நாடுகளை நோக்கி ஒட்டுமொத்தமாக சுட்டுவிரலை நீட்டுவது தான் சீனாவின் திட்டமாக உள்ளது. குறித்த மூலோபாயத்தின் ஊடாக மேற்கு லக மற்றும் பிரந்திய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான கொள்கைகளையும், சிந்தனைகளையும் கொண்டிருக்கும் ஜே.வி.பியின் அடிப்படை வாதிகளை அணுகுவதன் ஊடாக அநுரவுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தலாம் என்று சீனா கருதுகிறது.
அதேநேரம், அனர்த்தத்தின் போதான அமெரிக்காவின் பிரதிபலிப்பும் கவனிக்கத்தக்கது. பேரழிவுக்குப் பிறகு அமெரிக்கா அறிவித்த அவசர உதவி வெறும் 2 மில்லியன் டொலர்களாக இருந்தது. அத்துடன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் 2.1 மில்லியன் டொலர்கள் உதவித் திட்டம் கூட நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதற்காக உதவும் திட்டம் மட்டுமே. மொத்தத்தில், அமெரிக்காவின் மொத்த நிதியுதவி 4.1 மில்லியன் டொலர்களே. இது ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தியா போன்ற நாடுகள் வழங்கிய உதவிகளுடன் ஒப்பிடும் போது மிகக் குறை வாகவே உள்ளது.
சுனாமிக்குப் பிந்தைய உதவிகளுடன் ஒப்பிடுகையிலும் இது மிக மிகச் சொற்பமான வையாகவே உள்ளன. டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கத்தின் ‘அமெரிக்காவின் வளங்கள் அமெரிக்கர்களுக்கே’ என்ற கொள்கை யால் வெளிநாட்டு உதவித் திட்டங்கள் குறைக்கப் பட்டமையே இதற்கு அடிப்படையில் காரண மாகின்றது.
அனர்த்தங்கள் நிகழ்ந்து ஒருவாரத்தின் பின்னர் அமெரிக்க விமானப்படையின் சி-130 ஜே விமானம் கடந்த 8ஆம் திகதி பலாலி விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதற்கு முதல் நாள், அமெரிக்க விமானப்படையின் இரண்டு சி- 130 ஜே விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தன.
சமீபத்தில் இலங்கைக் கடற்படைக்கு நான்காவது ரோந்துக் கப்பலை வழங்கியதன் மூலம் தனது ஆழமான பாதுகாப்பு உறவுகளை அது வெளிப்படுத்தியிருக்கிறது. அத்துடன், அனர்த்த நிலைமைகளுக்கு மத்தியில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அந்நாட்டின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் அலிசன் ஹூக்கர் போன்ற உயர் அதிகாரிகள் கூட பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகளுக்கே முக்கியத்துவம் அளிப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
தற்போதைய அமெரிக்காவின் கவனம் பேரழிவு நிவாரணத்தில் இருந்து பாதுகாப்பு உறவுகளை நோக்கி நகர்ந்துள்ளது. அதற்கு காரணம் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை தக்கவைப்பதேயாகும்.
இவ்வாறான நிலையில் மற்றொரு வல்லாதி க்க நாடான ரஷ்யா அனர்த்த காலம் முழுவதும் அடக்கியே வாசித்தது. குறிப்பான அணுமின் ஆலை களை நிறுவுவதற்கு தொடர்ச்சியாக முட்டுக்கட்டைகள் இடப்படுகின்றமை அதற்கான மூலகாரணமாக இருக்கிறது. எனினும், ரஷ்யாவும் ஜெனரேட்டர்கள், நீர் பாய்ச்சுவதற்கான மோட்டர்கள், கூடாரங்கள், அரிசி, சீனி, எண்ணெய் என்பன உள்ளடங்கலாக சுமார் 35 தொன் பெறுமதியான அத்தியாவசியப்பொருட்கள் வழங்கி அனர்த்தப் பங்களிப்பு நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ளது.
எவ்வாறாயினும் இலங்கையில் நிகழந்திருக்கின்ற அனர்த்தம் இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளின் போட்டித் தன்மையான நகர்வுகள் இலங்கையின் மீள் எழுச்சிப் பாதையில் கணிசமான செல்வாக்கைச் செலுத்துகின்றன என்பது வெளிப்படையானது. ஆனால் இந்த உதவிகள் அனர்த்தங்களில் இருந்து மீள் எழுச்சி பெற்ற இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கைத் தெரிவுகளில் தொடர்ந்து செல்வாக்குச் செலுத் தாமல் இருக்கப்போவதில்லை.



