முன்மொழியப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தயாராகி விட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சட்டமூலத்தின்கீழ் பயங்கரவாதச் செயலைச் செய்பவர்களுக்கு மேல் நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்ற வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம், எண். 2026 என்ற பெயரில் இந்த புதிய சட்டம் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சால் கொண்டு வரப்படவுள்ளது. இது தற்போதைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு மாற்றாகக் கொண்டு வரப்படவுள்ளது.
வேண்டுமென்றோ அல்லது தெரிந்தோ, பயங்கரவாத நிலையைத் தூண்டுவது, பொதுமக்களின் எந்தவொரு பிரிவையோ அச்சுறுத்துவது, இலங்கை அரசாங்கத்தையோ அல்லது வேறு எந்த அரசாங்கத்தையோ அல்லது ஒரு சர்வதேச அமைப்பையோ, எந்தவொரு செயலையும் செய்யவோ அல்லது செய்யாமல் இருக்கவோ கட்டாயப்படுத்துவது, போரைப் பரப்புவது, பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவது, இலங்கை அல்லது வேறு எந்த இறையாண்மை கொண்ட நாட்டின் இறையாண்மையை மீறுவது, போன்ற குற்றங்கள், முன்மொழியப்பட்ட யோசனையில் பயங்கரவாதக் குற்றங்களாக வரையறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களாகவோ, பயங்கரவாத வெளியீடுகளை ஊக்குவிப்பதற்காகவோ அல்லது பரப்புவதற்காகவோ அல்லது பயிற்சி அளித்ததற்காகவோ குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டவர்களுக்கு பதினைந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் பதினைந்து மில்லியன் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
நியாயமான சந்தேகத்தின் பேரில் நபர்களை ‘நிறுத்திச் சோதனையிடவும்’, சந்தேக நபர்களிடமிருந்து பொருட்களைப் பறிமுதல் செய்யவும் இராணுவத்தினருக்கு அதிகாரம் உள்ளது. ஒரு சந்தேக நபர் காவலில் எடுக்கப்பட்டவுடன், அத்தகைய கைதுகள் குறித்து 24 மணி நேரத்திற்குள் இலங்கை மனித உரிமைகள் ஆணைகுழுவுக்கும், பொலிஸ்மா அதிபருக்கும் தெரிவிக்கப்பட வேண்டும்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடமிருந்து இரண்டு மாதங்களுக்கு தடுப்புக்காவல் உத்தரவைப் பெறவும் இந்த சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



