நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் தொலைத்தொடர்பு கேபிள்களுக்கு சேதம் ஏற்படும் அபாயம் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்குமாறு டயலொக் நிறுவனம், பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளை பாதித்த அனர்த்த சூழ்நிலையின் விளைவாக, ஃபைபர்-ஆப்டிக் மற்றும் செப்பு கம்பிகள் உள்ளிட்ட அத்தியாவசிய தொலைத்தொடர்பு கேபிள்கள் பொது இடங்களில் சேதமடைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வீதி பழுதுபார்க்கும் பணிகளின் போது சில நிலத்தடி தொலைத்தொடர்பு கேபிள்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலை, தொலைத்தொடர்பு சேவைகளை உடனடியாக மீட்டெடுப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளுக்கு குறிப்பிடத்தக்க தடையாக உள்ளது.
எனவே, பொதுமக்கள் எந்தவொரு வெளிப்படும் கேபிள்கள் அல்லது தொடர்புடைய அமைப்புகளை சேதப்படுத்தவோ, வெட்டவோ அல்லது தவறாகக் கையாளவோ கூடாது என டயலொக் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
அவ்வாறான செயல்கள் தண்டனைக்குரிய குற்றங்களாகும் என மேலும் தெரிவித்துள்ளது. தகவல் தொடர்பு இணைப்புகளை சேதப்படுத்துதல் அல்லது குறுக்கிடுதல் தொடர்பான நபர்கள் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு இலங்கை பொலிஸ் பொதுமக்களை மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.



