பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!

ஜனாதிபதியை விமர்சிப்போருக்கு எதிராக அவசரகாலச்சட்ட விதிகள் பிரயோகிக்கப்படும் என்ற பிரதியமைச்சர் சுனில் வட்டகலவின் கருத்து தொடர்பில் சர்வதேச ஊடகவியலாளர்கள் பேரவை கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது.

தற்போதைய நெருக்கடி நிலைக்கு மத்தியில் உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்கும், கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் பொதுமக்கள் கொண்டிருக்கும் சுதந்திரத்தை அரசாங்கம் பாதுகாக்கவேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இலங்கை மிகமோசமான இயற்கைப் பேரனர்த்தத்துக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், ஜனாதிபதியை விமர்சிக்கும் நபர்களுக்கு எதிராக அவசரகாலச்சட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பிரயோகிக்குமாறு பிரதியமைச்சர் சுனில் வட்டகல பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்துக் கண்டனத்தை வெளிப்படுத்தியும், கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும் சர்வதேச ஊடகவியலாளர்கள் பேரவை அறிக்கை வெளியிட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகலவுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பின்போது, குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் சிலரால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவையும், சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரையும் இலக்குவைத்து சமூகவலைத்தளங்களில் மிகமோசமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.

அதுமாத்திரமன்றி இவ்வாறான நடவடிக்கைகள் தொடரும் பட்சத்தில் இலங்கை அரசாங்கத்தினால் பொதுமக்கள் பாதுகாப்புச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அந்த சட்டத்தின் 5ஆம் சரத்து அவ்வாறான தகவல்களைக் கட்டுப்படுத்துவதற்கு இடமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதியமைச்சர் சுனில் வட்டகல இவ்வாறு கூறினாலும், அவசரகாலச்சட்டமானது விமர்சனங்களையோ அல்லது கருத்துக்களையோ ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்படமாட்டாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவின் கருத்தானது அனர்த்த முகாமைத்துவம் எனும் போர்வையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை ஒடுக்குவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சியாகும் என்று குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.