டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு வழங்கவிருந்த நிதியை பிரித்தானியா அதிகரித்துள்ளது.
அதன்படி, நிதியுதவியின் மொத்தத் தொகை ஒரு மில்லியன் டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் இதனை அறிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் தென்கொரிய ஜனாதிபதி லீ ஜே-மியுங் (Lee Jae Myung) தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரத்தில் கொரிய மக்கள் பங்கெடுப்பதாகக் தெரிவித்துள்ளார்.
இதேவேளை டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசர நிவாரண முயற்சிகளை ஆதரிப்பதற்காக தென்கொரிய அரசாங்கம் 5 இலட்சம் அமெரிக்க டொலரை வழங்க உறுதியளித்துள்ளது.
இந்த நிதி, உலக உணவுத் திட்டத்தின் மூலம், நுவரெலியா, பதுளை, குருநாகல், கண்டி, திருகோணமலை மற்றும் மன்னார் ஆகிய அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கப் பயன்படுத்தப்படும்.
இந்த உதவி இரு நாடுகளுக்கு இடையேயான நீண்டகால நட்புறவைப் பிரதிபலிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கனடா – இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தவிசாளர் சுகுமார் கணேசன் மற்றும் தலைவர் குலா செல்லத்துரை ஆகியோர் இணைந்து இலங்கையில் ஏற்பட்ட பேரனர்த்த நிவாரண நிதியாக 25 ஆயிரம் கனேடிய டொலர்களை அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவராண உதவிகளை வழங்கவும் இலங்கையின் மீள் கட்டுமானத்துக்கும் பல்வேறு தரப்பினரும் நிதி உதவி செய்து வருகின்றனர். இதன் அடிப்படையிலேயே கனடா – இலங்கை வர்த்தக சம்மேளனத்தினரும் இந்த நிதி உதவியை வழங்கியுள்ளனர். திறைசேரிக்கு நேரடியாக இந்த நிதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.



