சிறிலங்கா அரசத்தலைவர் டித்வா சூறாவளிப் பேரிடரை எதிர்கொண்டு அனைவரும் ஒன்றாகப் பயணித்து நாட்டைக் கட்டியெழுப்புவோம் என நாட்டு மக்களுக்கு உரையாற்றுகின்றார். ஆனால் அதே நேரத்தில் அவர் நாட்டு மக்களாகக் கூறிக்கொள்ளும் ஈழத்தமிழர்களை அவரின் பொலிசாரே பெண்கள் என்றும் பாராது அடித்து உதைத்து அனைவரும் ஒன்றாகப் பயணிக்க நாங்கள் விடமாட்டோம் என்று தையிட்டியில் நிரூபித்துள்ளனர். பௌத்தர்கள் அமைதிநாளாகக் கொண்டாடும் முழநிலவு நாளிலேயே புத்தருக்கு எதிரிலேயே நிலைநிறுத்தியுள்ளமைக்கு அரசத்தலைவர் அநுரகுமர திசநாயக்க எவ்வாறு நீதி வழங்கப் போகிறார் என்பதிலேயே அனைவரும் ஒன்றாகப் பயணித்து நாட்டை மனிதநேய அடிப்படையில் கட்டியெழுப்புவதும் நடைமுறைச்சாத்தியமாகும் என்பதே இலக்கின் கருத்தாக உள்ளது.
தையிட்டியில் இந்த மண் எங்களின் சொந்த மண் என்ற மக்கள் இறைமையை ஒடுக்கி மக்களின் நிலத்தை அபகரித்து மக்களின் நிலத்தில் அடாவடித்தனமாகப் படைபல உதவியுடன் கட்டப்பட்டுள்ள விகாரைக்கு எதிராக மக்கள் அமைதியான முறையில் கடந்த மூன்றாண்டுகளாக மாதத்தின் ஒவ்வொரு முழுநிலவுநாளிலும் நடாத்தும் தங்கள் நிலத்தைத் தங்களிடம் மீளக்கையளித்து தங்கள் வாழ்வாதாரத்தை உறுதி செய்யமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்து அமைதியாகச் சிறிலங்காவின் அரசியலமைப்புச் சட்டத்தை மீறாது போக்குவரத்துக்குப் பாதை விட்டு வீதி ஓரத்தில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் வராதவாறு நடத்தும் மக்கள் போராட்டத் தொடரில் 04.12.2025இல் காரணமின்றி வலிந்து புகுந்து சிறிலங்காவின் நீதிமன்றம் பொலிசாரின் தலையீட்டை இவ்விடயத்தில் ஏற்கனவே கண்டித்திருந்த நிலையிலும் பங்குபற்றியவர்கள் தங்களைக் காலநிலையில் இருந்து பாதுகாக்க அமைத்திருந்த கூடாரச் சீலைகளை வன் முறையாகப் பறித்தெறிந்து அதனைச் செய்யவேண்டாமெனக் கோரிய பெண்களை ஆண் பொலிசார் அடித்துத் தாக்கிய இனவெறி மதவெறி நிகழ்வு பதிவாகியுள்ளது.
அடிப்படை மனித உரிமைகளான கருத்துச் சுதந்திரம், அமைதியாக ஒன்று கூடும் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் என்பவற்றை மறுத்து ஈழத்தமிழரின் தங்களின் உடமைகைளப் பாதுகாக்கும் அடிப்படை உரிமையை வன்முறையாகத் தடுத்து ஈழத்தமிழ் மக்களின் சனநாயகப் பங்களிப்பையும் நிராகரித்துள்ளனர். இதன் வழி ஈழத்தமிழர்களின் இறைமை ஒடுக்கத்தை சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் நடைமுறைப்படுத்திய சிறிலங்காப் பொலிசார் சிங்கள பௌத்தர்களின் படைபல ஆதரவுடனான நில அபகரிப்பு தையிட்டி விகாரை நிறுவுதல் என்னும் ஈழத்தமிழினத்தின் மேலான பண்பாட்டு அழிப்புக்கான சிறிலங்கா அரசாங்கத்தின் அரசியல் செயற்திட்டம் என்பதை இயற்கையின் பேரிடருக்கு மத்தியிலும் மாற்றமின்றி நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் ஈழத்தமிழர்களின் மேலான இனஅழிப்பு நோக்குப் பண்பாட்டு இனஅழிப்பு நோக்குக் கொண்ட விடயங்களை ஈழத்தமிழர்களின் ஊடகங்கள் எனத் தங்களைக் கூறிக்கொள்ளும் ஊடகங்கள் கூட முக்கிய செய்திகளாக வெளிக்கொண்டுவராது மௌனிக்கின்ற கேவலமான ஊடகப்பண்பை இலக்கு வன்மையாகக் கண்டிக்கிறது. நடைபெறும் ஈழத்தமிழின அழிப்பை பொறுப்புடன் வெளிப்படுத்தி அதனை நீக்குவதை நிபந்தனையாக வைத்து சிறிலங்கா அரசுடன் உரையாடல்களைச் செய்ய வேண்டிய உலகத் தமிழர் அமைப்பினர் அதனை விடுத்து பேரிடரில் ஆளும் அரசுக்கு உதவித் தாம் தமக்கான நன்மைகளைப் பெறக் குழு அமைக்கும் கேலமான போக்கையும் உலகு காண்கிறது. அவ்வாறே வெகுசனப் போராட்டங்கள் நடைபெறுகின்ற பொழுது அதில் தாங்கள் கலந்து கொள்ளாது தாயகத்திலும், அவற்றைத் தாங்கள் அனைத்துலக மயப்படுத்தாது அனைத்துலக நாடுகளிலும் வாழும் ஈழத்தமிழர்கள் வாழ்ந்து தாயகக் கடமையைச் செய்யாது விடுவதாலேயே வெகுசனப்போராட்டங்களில் பங்குபற்றுபவர்களை சிறிலங்காப் படையினர் தாங்கள் நினைத்த மாதிரி நடத்துகிறார்கள் என்ற வேதனையான உண்மையை இனியாவது அனைத்து ஈழத்தமிழரும் இதனை உணர்ந்து விருப்பு வெறுப்புக்களைக் கடந்து ஈழத்தமிழர்களின் நீதியின் குரலாகச் செயற்பட வேண்டுமென்பது இலக்கின் எதிர்பார்ப்பாக உளள்து.
பேரிடர் மீள் கட்டுமானம் இன்று ஒவ்வொரு ஈழத்தமிழராலும் தாயகத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நேரத்தில் ஊகங்களின் அடிப்படையில் எதனையும் செய்யாது அறிவார்ந்த முறையில் சிறந்த தொழில்நுட்பத் தெரிவின் வழி அவற்றைச் செய்விக்க வேண்டியது புலத்தில் உள்ள ஈழத்தமிழர்களின் கடமையாகிறது. நடந்ததை இழப்பாக கருதாது இருப்பதை அத்திவாரமாகக் கொண்டெழுதல் எந்த இழப்பின் இடையிலும் மீள்திறன் கொண்டெழுவதற்கு அவசியம். இதனைப் பொருளாதாரமே அரசியலை நிர்ணயிக்கும் நிலையில் பொருளாதாரத்தின் ஆணிவேரான பயிர்ச்செய்கையிலும் நடைமுறைச் சாத்தியமாக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஈழத்தமிழர் தாயகத்தில் இயற்கைப் பேரிடரில் ஈழத்தமிழர்கள் மீள்திறன் கொண்டெழப் போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில் உணவினதும் மனிதநேயத்தினதும் புதிய தொடக்கம் (Regenesis) என்னும் நூலின் ஆசிரியரான பிரித்தானியாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஜோர்ஜ் மொன்பியோ (George Monbiot) அவர்கள், பிரித்தானியாவின் ஆங்கில நாளிதழான த கார்டியன்” 05.12.2025 பத்திரிகையில் “ஒக்ஸ்வேர்ட்டில் ஒரு குடி குடித்தவாறு வேளாண்மை புதிய ஏற்பாட்டை தரும் பாத்திரமாகவே என்றும் உள்ள அதிசயம் கண்டு வியப்பால் தடுமாறாலாம்” “Over a pint in Oxford, we may have stumbled upon the holy grail of Agriculture” என்னும் இயற்கை அறிவியல் கட்டுரையை எழுதியுள்ளார். இதனை சவுத் ஒக்ஸ்வேர்ட்செயரில் விட்சேர்ச் – ஒன்- தேம்ஸில் இயற்கை முறையில் இயற்கைக்கு எந்தப்பாதிப்பையும் விளைவிக்காது உரங்களோ களைக்கொல்லிகளோ பூச்சி நாசினிகளோ பயன்படுத்தாது பயிர்ச்செய்கையைச் செய்வதை ஊக்குவிக்கும் பண்ணையை நடாத்தி வரும் இயற்கை பயிர்ச்செய்கை நிபுணரான டொலி எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இயன் டொல்கர்ஸ்ட் ( Ian Tolhurst) அவர்கள் உடன் இணைந்து அனுபவப்பட்டு எழுதிய அவர் நில அதிர்ச்சியியலைப் ( Sesimology) பயன்படுத்தி நிலத்துக்கு கீழ் உலகெங் கும் கேபில் குழாய்கள் பதிக்கப்பட்டதால் விளையும் கதிர்வீச்சையே பயிருக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கக் கூடிய முறையில் மண்ணை ஈரப்படுத்தி அதில் உள்ள நுண்ணுயிர்களைக் கொண்டே பயிருக்கான ஊட்டச்சத்தை வழங்கி மண்ணின் மீள்தன்மையை மீட்டு குறைந்த செலவில் இயற்கை முறையில் உச்ச விளைச்சலைப்பெறலாம் என்னும் உண்மையை மீளுறுதிப்படுத்தியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவால் தன்னியக்கத்தன்மையுள்ள ஆயுதங்களாக மாற்றப்பட்டு வரும் ட்ரோன்களால் வல்லாண்மைகளும் பிராந்திய மேலாண்மைகளாலும் எந்த நாட்டின் வானையும் கடலையும் மண்ணையும் கட்டுப்படுத்தித் தங்களின் பாதுகாப்பு தங்களின் பணப்பெருக்கம் என்பவற்றுக்கு உலக நாடுகள் எதனையும் வலுக்கட்டாயப்படுத்தக் கூடிய புதிய உலக அரசியல் முறைமையை நடைமுறைப்படுத்தி உள்ள நிலையில் காலநிலை சீர்கேடுகளுடனும் போரச்சத்துடனும் தான் ஒவ்வொருநாடும் நாளாந்த வாழ்வை எதிர்கொள்ள வேண்டியதாகியுள்ளது. இவற்றை ஓரளவு தமக்கு ஏற்ற வகையில் அமைத்துக்கொள்ளவே கடந்த வாரம் ரஸ்ய அதிபர் புடின் மோடியுடன் உடன்படிக்கை கைச்சாத்திட இந்தியா வந்தார்.
பிரான்சின் அதிபர் மக்ரோன் ஜியுடன் உடன்படிக்கை கைச்சாத்திட சீனா சென்றார். ட்ரம்ப்புக்கு உலக உதைபந்தாட்ட சங்கமான பிவ்வா அதன் அமைதிக்கான பரிசை வழங்கி 96 ஆண்டுகளில் முதன்முறையாக 48 அணியினர் உடன் 2026ம் ஆண்டுக்கான போட்டிகள் நிர்ணய இழுப்பை நடத்தி ட்ரம்பின் காசா – உக்ரேன் அமைதி முயற்சிகளுக்கு அங்கீகாரத்தை வழங்கியது. ஆயினும் மக்கள் உறுதியுடன் மக்கள் இறைமையைப் பேணுவர் என்பதற்கு உதாரணமாக உக்ரேன் எந்த எல்லை இழப்பையும் அனுமதிக்க மாட்டோமென்றும் பலஸ்தீனியர்கள் மண்ணை விட்டுக்கொடுக்க மாட்டோடிமன்றும் உறுதியாக உள்ளனர். இவ்வாறு மக்கள் இறைமை கருத்தில் எடுக்கப்படாது வல்லாண்மைகள் மேலாண்மைகள் வழி போருடனான அமைதி என்று முள்ளிவாய்க்காலில் உலகநாடுகள் தொடங்கிய புதிய முறைமை உலகின் புதிய அரசியல் ஒழுங்குமுறையாகவே மாறிய நிலையில் வாழ்கின்ற மனிதர்கள் காலநிலைச் சீர்கேடுகளையும் போரச்சத்தின் அல்லது போரின் விளைவுகளையும் நாளாந்த வாழ்வின் ஒரு அங்கமாக ஏற்று அதற்கு நடுவில் தங்கள் மண்ணையும் பாதுகாப்புடன் கூடிய அமைதியையும் வளர்ச்சிகளையும் கட்டமைத்தேயாக வேண்டிய தேவை தோன்றிவிட்டது. இதற்கு ஈழத்தமிழர்களும் விதிவிலக்கல்ல. இந்த மண் எங்களின் சொந்த மண் என்பதை முதன்மைப்படுத்தி ஈழத்தமிழர் ஒவ்வொருவரும் ஒருமைப்பாட்டுடன் இருப்பதைக் கொண்டு அனைத்தையும் மீளப்பெறும் உறுதியான பயணத்தை தமிழர் ஒருங்கிணைப்பால் தொடருவோம் என இனியொரு விதி செய்வோம் என அழைக்கிறது இலக்கு.
ஆசிரியர்




