அனர்த்த நிவாரண நிதியாக 10 பில்லியன் ஒதுக்கீடு: அமைச்சர் ஆனந்த விஜேபால கருத்து

‘அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு  நிதி நிவாரணமளிக்க   10 பில்லியன் ரூபாய் முதற்கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளது. சகல பிரதேச செயலகங்கள் ஊடாகவும் இந்நிதி நிவாரணம் இன்று முதல் வழங்கப்படும்’ என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

முழு நாடும் துயரத்தை எதிர்கொண்டுள்ள போது எதிர்க்கட்சியினர் சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடுகிறார்கள். போலியான விடயங்களை சமுகமயப்படுத்தாமல் இருப்பது  வழங்கும் மிகப்பெரிய ஒத்துழைப்பாகும் என எதிர்க்கட்சிகளிடம் வலியுறுத்துகிறேன் என அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின்  பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு,  வர்த்தகம் மற்றும் உணவு  பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார  அபிவிருத்தி அமைச்சு ஆகிய  அமைச்சுகளுக்கான  நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.