மக்கள் நலனை முன்னிறுத்தி, அரசியல் கொள்கை வேறுபாடுகளைப் புறந்தள்ளுமாறு சர்வஜன நீதி அமைப்பு அழைப்பு

இப்போது நிலவும் நெருக்கடி நிலைக்கு மத்தியில் அரசியல் கொள்கை வேறுபாடுகளைப் புறந்தள்ளி, அரசாங்கமும், சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என ‘சர்வஜன நீதி’ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

‘தித்வா’ சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி பல நூற்றுக்கணக்கானோர் பலியாகிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவ்வனர்த்தத்தை சகல கட்சிகளும் கூட்டிணைந்து கையாளவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேராசிரியர் ஜயதேவ உயன்கொட, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, ஜனாதிபதி சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், சாலிய பீரிஸ்  உள்ளடங்கலாக மேலும் பல சட்டத்தரணிகளின் கையெழுத்துடன் ‘சர்வஜன நீதி’ அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது:

‘தித்வா’ சூறாவளி காரணமாக கடந்த சில தினங்களாக நிலவிய மிகமோசமான காலநிலையினால் இடம்பெற்ற இழப்புக்கள் மற்றும் சேதங்கள் தொடர்பில் நாம் மிகுந்த கவலையடைகிறோம். தற்போது நிலவும் துயரம் நிரம்பிய சூழ்நிலைக்கு மத்தியில், இலங்கை அனர்த்த முகாமைத்துவச்சட்டம், தேசிய அனர்த்த முகாமைத்துவப் பேரவை மற்றும் ஏனைய அவசியமான கட்டமைப்புக்கள் உள்ளடங்கலாக இவ்வாறாதொரு அனர்த்தத்தை செயற்திறன்மிக்க வகையில் கையாள்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா என சிந்திக்கவேண்டியுள்ளது.

அத்தோடு கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் திகதி அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டதன் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட சில அவசரகால வழிகாட்டல்களின் அநாவசியமானதும், பொருத்தமற்றதுமான தன்மை குறித்து நாம் கரிசனை கொண்டிருக்கிறோம்.

சில எதிர்க்கட்சிகளின் தலைவர்களின் அழுத்தம் காரணமாக அவசரகாலநிலையை பிரகடனம் செய்வதற்கு ஏற்புடைய சூழ்நிலை இருப்பதாக அரசாங்கம் கருதியதே தவிர, அதன் பரந்துபட்ட தாக்கங்கள் மற்றும் கடப்பாடுகள் குறித்துக் கவனம் செலுத்தவில்லை.

இந்நிலையில் அவசரகால வழிகாட்டல்கள் அனர்த்த நிலையை முகாமை செய்வதற்கு மாத்திரமே பயன்படுத்தப்படும் எனவும், மாறாக மக்களின் மடித உரிமைகளை ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்படமாட்டாது எனவும் ஜனாதிபதியினால் அளிக்கப்பட்ட வாக்குறுதியை உரியவாறு பின்பற்றுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.

அதேபோன்று தற்போதைய நெருக்கடி நிலையில் மீட்சி, நிவாரணம் மற்றும் மீளக்கட்டியெழுப்பல் என்பவற்றுக்கு அவசியமான உடனடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இவ்வேளையில் குறிப்பாக அரசியல், கொள்கை வேறுபாடுகளை ஒதுக்கி, நாடு முகங்கொடுத்திருக்கும் பெரும் சவாலை உரியவாறு கையாள்வதற்கு தூரநோக்கு சிந்தனையுடன் சகல தரப்பினரும் கூட்டிணைந்து செயலாற்றவேண்டியது மிக அவசியமாகும்.

மேலும் மிகமோசமான இந்த மனிதாபிமானப்பேரழிவை தமது அரசியல் சுயலாபங்களுக்காக அரசியல்மயப்படுத்தவேண்டாம் என சகல அரசியல் காட்சிகளையும் வலியுறுத்துகிறோம். நிறைவாக அரசாங்கமும், சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருமாறு கோருகிறோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.