இலங்கைக்கு அவசர உதவியை வழங்கும் ஐக்கிய இராச்சியம்!

இலங்கையில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஐக்கிய இராச்சியம் 890,000 அமெரிக்க டொலர்கள் (£675,000 பவுண்ட்கள் ) மதிப்பிலான அவசர மனிதாபிமான நிவாரணத்தை வழங்கியுள்ளது.

இந்த உதவிகளை, செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. முகவரமைப்புக்கள், உள்ளூர் சிவில் சமூக அமைப்புகளுடன் ஏற்கனவே செயற்பட்டுவரும் மனிதாபிமான அமைப்புகளின் பங்காளர்கள் மூலம் வழங்கப்படும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான தற்காலிக கூடாரம், குடிநீர், சுகாதார வசதிகள் மற்றும் வாழ்க்கையை பாதுகாக்க அவசியமான உதவிகள் இதன் மூலம் வழங்கப்படவுள்ளன.

வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துடனான சந்திப்பின் போது, இலங்கைக்கான உதவியை மேலும் வலுப்படுத்துவதில் ஐக்கிய இராச்சியத்தின் அர்ப்பணிப்பை, இலங்கைக்கான இடைக்கால பிரித்தானிய உயர்ஸ்தானிகராக உள்ள தெரசா ஓ’மாஹோனி உறுதியளித்தார்.

இதேவேளை, இங்கிலாந்து மன்னர், டித்வா புயல் பாதிப்புக்குள்ளான அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதுடன், அவசர மீட்பு பணியாளர்களின் தைரியத்திற்கும், உதவி வழங்கும் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

புயல் காரணமாக வீடுகள், வாழ்வாதாரங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை இழந்த மக்களுக்கு உதவுவது என்பது பிரிட்டன் – இலங்கை நட்புறவின் நீண்டகால  இணைப்பினை பிரதிபலிப்பதாக உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளதுடன், இலங்கையுடன் நாங்கள் ஒற்றுமையுடன் நிற்கிறோம் எனவும் வலியுறுத்தியுள்ளது.