அரசாங்கத்துக்கு எதிராக பாராளுமன்றில் மீண்டும் ஒரு குற்றச்சாட்டு

அனர்த்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கம்பளை நகரத்தில் சீரமைப்புப் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் அநுராத ஜயரத்ன இன்றைய (03) பாராளுமன்ற அமர்வில் உரையாற்றியபோது குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த இயற்கை அனர்த்தங்கள் குறித்து அரசாங்கத்தின் மீது நேரடியாகக் குற்றம் சுமத்த முடியாது என்றாலும், அனர்த்த நிலைமைகள் குறித்துப் பேசுவதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்காமல், பாதீட்டை நிறைவேற்றிக் கொள்ள எடுத்த முயற்சிகள் குறித்து தாம் அதிருப்தி கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், வெள்ள அபாயம் குறித்து கம்பளை மக்களுக்கு முன்னறிவிக்க அரசாங்கம் தவறிவிட்டதாக அவர் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.

மகாவலி கங்கைக்கு நீர் மட்டம் உயரும் அபாயம் குறித்து நாவலப்பிட்டி நீர்ப்பாசன திணைக்களத்தின் உப அலுவலகத்தால் அளவிடப்பட்ட போதும், 400 மில்லி மீற்றர் மழை பெய்யும் என்று தெரிந்தும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படாததால், பல உயிர்கள் பலியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே உயிரிழந்த அனைவருக்கும் இந்த அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கொத்மலை அணையைத் திறந்தமையால் ஏற்பட்ட ஆபத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.  குறிப்பாக, மாவத்துரை பகுதியில் 15 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு, 40க்கு மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்ட போதும், அரசாங்கம் எவ்வித மீட்பு நடவடிக்கையும் எடுக்காததால், பாதிக்கப்பட்ட மக்களே தமது நிதியைக் கொண்டு சடலங்களை வெளியில் எடுத்தனர் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் அநுராத ஜயரத்ன குற்றம் சுமத்தினார்.