அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை மூன்று கட்டங்களில் வழங்கத் தயாராக இருப்பதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகத்தை ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியபோது யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் ( Consul General) சாய்முரளி இதனை தெரிவித்தார்.
இந்த உதவிகளில் உடனடி நிவாரணம், மீள்கட்டுமான உதவிகள் மற்றும் எதிர்கால இடர்களை எதிர்கொள்வதற்கான நிரந்தரத் தயார்ப்படுத்தல் ஆகியவை அடங்கும். குறிப்பாக, உலகளாவிய காலநிலை மாற்றத்தால் அடிக்கடி நிகழும் இடர்பாதிப்புகளைத் தணிப்பதற்கான நிரந்தரக் கட்டமைப்பை, இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது போன்று இங்கும் உருவாக்குவதற்கான உதவிகளையும் எதிர்காலத்தில் வழங்க முடியும் என அவர் உறுதியளித்தார்.
இதற்காக வடக்கு மாகாண மக்களுக்கான தற்போதைய உடனடித் தேவைகளின் பட்டியல் மற்றும் அழிவடைந்த உட்கட்டுமானங்களின் சேத விபரங்களை வழங்குமாறு அவர் ஆளுநரைக் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த ஆளுநர், பேரிடர்களின் போது இந்தியாவே எப்போதும் முதலாவதாக உதவிக்கரம் நீட்டுவதாகக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார்.
அத்துடன், யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களும் கூடுதலான அழிவுகளையும், அதிக உட்கட்டுமான அழிவுகளையும் எதிர்கொண்டுள்ளதாகவும், இறங்குதுறைகள், வீதிகள், பாலங்கள், சிறிய மற்றும் நடுத்தர குளங்கள் உள்ளிட்ட உட்கட்டுமானங்கள் அழிவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வெள்ளம் வடியத் தொடங்கி மக்கள் வீடுகளுக்குத் திரும்பும் நிலையில், அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிக்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தநிலையில், நிவாரணப் பொருள்களுடன் விமானங்கள் வந்திறங்குவது மற்றும் மருத்துவக் குழுக்கள் கொழும்பு வந்தடைந்துள்ளமை உள்ளிட்ட இந்தியாவால் வழங்கப்பட்டு வரும் உதவிகள் தொடர்பாகவும் இதன்போது கருத்து பரிமாறப்பட்டுள்ளது.



