சமூக ஊடகங்களில் அவதூறு செய்பவர்கள் மீது அவசரகால விதிகளை அமுல்படுத்த உத்தரவு

சமூக ஊடகங்கள் மூலம் ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக மிகவும் தரக்குறைவான, அவதூறான மற்றும் ஆதாரமற்ற பிரசாரங்களை மேற்கொள்வோர் மீது அவசரகால விதிகளை அமுல்படுத்துமாறு பொலிஸாருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் சுனில் வட்டகல அறிவுறுத்தியுள்ளார்.

சமூக ஊடகங்களில் ஜனாதிபதி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரச அதிகாரிகளுக்கு எதிராக எழும் அடிப்படையற்ற சேறு பூசல்கள் குறித்து அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்த நிலைமை சாதாரணமானதாகி, மேலும் பரவி, பிராந்திய மட்டத்தில் உள்ள பெண் உறுப்பினர்கள் வரை தாக்கக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.

இந்தச் சூழலைக் கையாள, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் நேரடியாக அவசரகால விதிமுறைகளை அமுல்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த விதிமுறைகளின் 20 மற்றும் 21வது பிரிவுகள், இந்த நிலைமையை உள்ளடக்கியுள்ளதாகவும், உடல்ரீதியாகவோ, இணையம் மூலமாகவோ அல்லது செயற்கை நுண்ணறிவுதொழில்நுட்பம் மூலமாகவோ, தற்போதைய அனர்த்த நிலைமை தொடர்பில் பொய்யான கருத்துக்கள், திரிபுபடுத்தல்கள் அல்லது நிலைமையை சீர்குலைக்கும் அர்த்தத்தில் எந்தவொரு பிரசார நடவடிக்கையையும் யாரும் மேற்கொள்ள முடியாது என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த விதிமுறைகளின் கீழ் தவறு செய்பவர்களுக்கு நீதிமன்றம் மூலம் ஐந்து வருடங்களுக்கு மிகாத சிறைத் தண்டனையும், சூழ்நிலைக்கு ஏற்ப நீதவான் நீதிமன்றம் மூலமும் தண்டனை வழங்க முடியும்.
ஏற்கனவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் 20க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல குறிப்பிட்டார்.