நாடு எதிர்கொண்டுள்ள அனர்த்த நிலைமையில் இருந்து, நாட்டையும் மக்களையும் எவ்வாறு மீள இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான வேளைத்திட்டத்தை அமைப்பது தொடர்பில் கலந்துரையாட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் புதன்கிழமை (3) கலந்துரையாடவுள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் நடவடிக்கை காரியாலயத்தில் புதன்கிழமை (3) மாலை 4.30 மணிக்கு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன குறிப்பிடுகையில், நாட்டில் கடந்த காலங்களிலும் வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளன. அப்போதெல்லாம், இருந்த அரசாங்கங்கள் அதுதொடர்பான அறிவிப்பு விடுக்கப்பட்டவுடன், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைதுக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுத்து, உயிர் சேதங்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டிருக்கிறது.
என்றாலும் இந்தமுறை ஏற்பட்டுள்ள அனர்த்தத்தால் வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அளவு பாதிப்பும் உயிரிழப்புக்களும் இடம்பெற்றுள்ளன. அதனால் கடந்த காலங்களில் இவ்வாறான அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்த அனுபவமுள்ள தலைவர் என்றவகையில், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, இந்த அனர்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தின் உடனடி நிவாரணங்கள் கிடைக்கச் செய்யும் நோக்கில் 16 அம்சங்கள் அடங்கிய கோரிக்கை ஒன்றை அரசாங்கத்துக்கு வழங்கி இருக்கிறது.
அதேநேரம் பாதிக்கப்பட்ட மக்களை மீள இயல்பு நிலைக்கு கொண்டுவர எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என ஆராயவே இன்று அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்படும் ஆலோசனைகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம் என்றார்.



