இலங்கையில் கடந்த வாரம் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் மலையகத்தின் பெரும்பாலான பகுதிகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மத்திய மாகாணத்தில் கண்டி, நுவரெலியா, பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் ஏனைய மாவட்டங்களை விட அதிகளவான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
நேற்று மாலை வரை கண்டியில் 88 உயிரிழப்புக்களும், பதுளையில் 83, நுவரெலியாவில் 75 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன் அது மாத்திரமின்றி கண்டியில் 150 பேரும், நுவரெலியாவில் 63 பேரும், பதுளையில் 48 பேரும் காணாமல் போயுள்ளனர். இந்த மாவட்டங்களில் மண்சரிவு ஏற்பட்ட சில பகுதிகளில் மீட்பு பணிகளை முன்னெடுப்பதில் கூட கடும் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள குழுக்கள் தெரிவித்துள்ளன.
எனவே அப்பிரதேசங்களில் உயிரிழந்தவர்கள், காணாமல் போனோர் தொடர்பில் துள்ளியமாக தரவுகளையும் பெற முடியாமலிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நாவலப்பிட்டி – தொலஸ்பாகை, பரகல, மடுல்சீமை, ஹங்குராங்கெத்த, நானுஓயா, ரதல்ல, இறம்பொடை, தலவாந்தெண்ணை, கந்தப்பனை, றாகல, மாத்தளை – கம்மடுவ, இங்குருவத்த, ரம்புக்எல – விலானகம, டயகம – போடைஸ், கொத்மலை – ரம்பொடகம, மஸ்கெலியா, நாவலப்பிட்டி – உலப்பனை போன்ற பல பிரதேசங்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் பெரும்பாலான பிரதேசங்களில் நேற்று வரை தொலைதொடர்புகளும் வழமைக்கு திரும்பவில்லை. இதன் காரணமாக அங்கு உதவிகள் தேவைப்படுவோருக்கு அவற்றை வழங்குவதிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அது மாத்திரமின்றி நுவரெலியா மாவட்டத்தில் பெரும்பாலான வங்கிகளில் உள்ள தானியக்க பணம் வழங்கும் இயந்திரங்களும் (ஏ.டி.எம்.) செயலிழந்துள்ளன. இதனால் வங்களிலிருந்து பணத்தை எடுப்பதிலும் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



