
இலங்கையில் தொல்பொருள் திணைக்களம் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் 1890ஆம் ஆண்டு நிறுவப்பட்டு 1940 ஆம் ஆண்டில், 9 ஆம் இலக்க தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் மூலம் இது சட்டப்பூர்வமாக்கப்பட்டது.
தொல்பொருளியல் மரபுரிமை தொடர் பான சரியான முகாமைத்துவத்தை வளர்த் தெடுப்பது இலங்கைத் தொல்பொருளியல் திணைக் களத்தின் முதன்மை நோக்கம். இதனால், இலங்கையின் தொல்லியல் மரபுரிமையை முகாமைப்படுத்துவதையும் அது தொடர்பான செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவதையும் இத் திணைக்களம் முக்கிய பணியாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.
தொல்பொருளியல் மரபுரிமை தொடர் பில், தேவையான மனித வளங்களையும், நிறு வன வளங்களையும் உருவாக்கிப் பேணுதல்; நாடு முழுவதிலும் உள்ள தொல்லியல் மரபு ரிமைகளைப் பாதுகாத்தல்; அவற்றைப் பதிவு செய்தல், இம்மரபுரிமை தொடர்பாக மக்களி டையே அறிவை வளர்த்தல் தொல்லியல் களங்களையும், நினைவுச்சின்னங்களையும், தொல்பொருட்களையும் பேணிப் பாதுகாத்தல், தொடர்பான ஆய்வுகளில் ஈடுபடுதல் என்பன இத் திணைக்களத்தின் செயற்பாட்டு வரம்புக்குள் அடங்குகின்றன.
இவ்வாறான நோக்கமாக பொதுவாக கூறப்பட்டாலும் வடகிழக்கை பொறுத்தவரை பௌத்தமதத்தையும் பௌத்த சின்னங்களையும் ஆய்வு செய்து விகாரைகளையும், புத்தர் சிலைகளையும் அமைப்பதற்கான பௌத்த மத திணைக்களமாகவே தொல்பொருள் திணைக்களம் செயல்படுகிறது என்ற அச்சம் வடகிழக்கு தமிழர்கள் மத்தியில் உண்டு. 2009,மே,18,க்கு பிறகான சூழலில் ஒரு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை மாறி மாறி ஆட்சி செய்த சிங்கள அரசுகள் நடத்தி வருகின்றன.
தொல்பொருளியல் வன்முறை
இலங்கை அரசின் ஒரு பாகமாக இருக்கும் தொல்பொருளியல் திணைக்களம், இலங்கையி னைச் சிங்கள பௌத்தர்களுக்குரிய ஒரு தேசமாக உருவாக்கும் முயற்சிகளுக்கு பங்களிப்புச் செய்து வருகிறது. எமது பாடசாலைகளிலே கற்பிக்கப்படும் வரலாற்றுப் பாடநூல்கள் எவ்வாறு நாட்டின் சிறுபான்மை இன மக்களின் வரலாறுகளை இருட்டடிப்புச் செய்கின்றனவோ, அதே போலவே தொல்பொருளியல் திணைக் களமும் சிறுபான்மை மக்களிற்கும், இந்தத் தீவுக்கும் இடையிலான வரலாற்று ரீதியிலான உறவுகளை நீர்த்துப் போகச் செய்யும் பணிகளிலே ஈடுபடுகிறது. தொல்பொருளியல் துறையினைப் பயன்படுத்தி, இவ்வாறு திட்டமிட்ட முறையிலே, அரசினால் மேற்கொள்ளப்படுகிறது.
வடகிழக்கு மாகாணங்களில் இருந்து தமிழ்த் தேசிய அடையாளத்தின் மூலமான ஒரு சுயநிர்ணய உரிமைக்கான குரல் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில், இந்தப் பிரதேசத் தினை சிங்கள பௌத்த மயமாக்குவதன் மூலம், இப்பிராந்தியத்தின் சுயநிர்ணய உரிமைக்கான கோசங்களை வலுவிழக்கச் செய்யலாம் என்பதுவும் தொல்பொருளியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் வன்முறைக்கு மற்றொரு காரணம் ஆகும்.
தொல்பொருளியல் செயலணி
இவ்வாறான ஒரு சூழமைவிலேயே, கிழக்கு மாகாணத்தில் இருக்கும் தொல்பொருளியல் முக்கியத்துவம் மிக்க இடங்களை முகாமை செய்வதற்கான ஒரு செயலணியின் நியமனம் ஜனாதிபதியினால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலமாக அண்மையிலே வெளியிடப்பட்டது. ஒப்பீட்டளவில் நோக்குகையில் இலங்கையிலே இன, மதப் பல்வகைமை மிகவும் கூடிய மாகாண மாகக் கிழக்கு மாகாணம் அமைகின்றது.
கிட்டத்தட்ட 77% ஆன தமிழ் பேசும் மக்களை உள்ளடக்கிய ஒரு மாகாணத்தின் தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க இடங்களைப் பேணும் நோக்கத்துக்காக அமைக்கப்பட்டிருக்கும் ஒரு செயலணியிலே தமிழ் பேசும் சமூகங்களைச் சேர்ந்த ஒருவர் தன்னும் இடம்பெறாமை, கிழக்கில் வாழும் தமிழ்,முஸ்லிம் மக்களின் மத்தியில் இந்தச் செயலணி தொடர்பாக அச்ச உணர்வுகளைத் தோற்றுவித்துள்ளது. தமது சமூகங்களின் கலா சாரங்களையும், மதச் சின்னங்களையும், ஏன் தம் அடையாளம் சார் இருப்பினையும் தகர்க்கும் வகையிலேயே, இந்தச் செயலணி செயற்படக் கூடும் என்ற அச்சம் அவர்களைச் சூழ்ந்துள்ளது.
இந்தச் சூழலிலேயே இந்த இரண்டு சமூகங்களும் இணைந்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்துப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த இரண்டு சமூகங்களும் இணைந்து செயற்படுவதற்கு எவ்வாறான அரசியல் முயற்சிகள் அவசியம் என்பதனையும், அரசின் குறுகிய தேசியவாத ரீதியிலான தொல்பொருளியல் பார்வைக்கு மாற்றாக, இந்தப் பிரதேசத்திற்கென எவ்வாறான மாற்று அரசியற் பார்வை ஒன்று தேவைப்படுகிறது என்பதனையும் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் முக்கிய நோக்கம் ஆகும்.
இந்தச் சூழலில் வடக்கு கிழக்கு எங்கும் பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பானது பெரு மெடுப்பில் நிகழ்த்தப்படுகின்றது.
கடந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் அந்த ஆக்கிரமிப்பை தற்காலிகமாக நிறுத்தி தமிழ் மக்களுடன் ஒன்றித்து போராட்டங்களை செய்து உலக நாடுகளின் கடன்களை பெற்றுக் கொள்ளும் வரை வாழாதிருந்த பௌத்த சிங்கள பேரினவாதம் இன்று தன்னுடைய முகத்தை மிகத் தெளிவாக வெளிக்காட்டி இருக்கின்றது.
திரிக்கப்பட்ட தொல்பொருள் ஆய்வு முடிவுகளை வெளியிடுவதன் மூலம் வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்ற கோட் பாட்டைச் சிதைப்பதே பேரினவாதத்தின் முதன்மை நோக்கமாக இருப்பதாக தமிழ் சிவில் சமூக அமையம் அறிக்கையொன்றினை வெளியிட் டுள்ளது.
குறித்த அறிக்கையில், தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கில் இவ்வாறான விஞ்ஞான பூர்வமற்ற, திரிக்கப்பட்ட தொல்பொருள் ஆய்வு முடிவுகளை வெளியிடுவதன் மூலம் வடக்கு-கிழக்கு தமிழர்களின் தாயகம் என்ற கோட் பாட்டைச் சிங்கள-பௌத்த பேரினவாதம் சிதைத்து வருகின்றது. சிங்கள-பௌத்த மயமாக்கல் மூலமாக சிங்கள-பௌத்தர்களின் பாரம்பரிய வாழிடமாக வடக்கு-கிழக்கைக் மாற்றியமைத்து, தமிழர் தாயகத்தை ஆக்கிரமிப்பதே சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் முதன்மை நோக்காக இருந்து வருகின்றது.
அரசின் அனுசரணையிலான விவசாயக் குடியேற்றத்திட்டங்கள் போலவே தமிழர் பகுதிகளில் இவ்வாறு பௌத்த தொல் பொருட் சின்னங்களைக் கண்டடைவது என்பதுவும், தமிழர்களின் தாயகத்தைச் சிங்களக் குடியேற்றங்கள் மூலம் ஆக்கிரமிப்பதற்கான முதற்படியாக எப் போதும் இருந்து வருகின்றமையே இவ்வாறான நடவடிக்கைகள் தமிழ் மக்கள் மத்தியில் தமது இருப்புத் தொடர்பான அச்சத்தை ஏற்படுத்த காரணமாகின்றது.
தொல்லியல் எனும் போது அது இந்து, பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் இடங்களாக இருக்கலாம். ஆனால் கடந்த காலங்களில் தொல் லியல் எனும்போது அவை பௌத்த கலாச் சாரத்திற்கான இடம்போன்று காட்டுகின்றனர். அம்பிட்டிய சுமனரத்ன தேரர் என்ற ஒருவர் அடாவடிகளில் ஈடுபடுகின்றார்.
தற்போது அவர் கைது செய்யப்பட உள் ளதாக கூறப்பட்டாலும் கடந்த காலங்களில் அவர் நீதிமன்றில் பல வழக்குகளில் உள்ளார் கைது செய்யப்பட்டாலும் வெளியில் அவர் வந்த சந்தர்பங்கள் பல உண்டு அவர் கெட்ட வார்த்தைகளை பேசி இன நல்லிணக்கத்தை குழப்புகின்றவர் இவ்வாறானவர்களின் தலையீடு கள் தொல்லியல் விடயங்களில் இருக்கும் போது இன நல்லிணக்கம் என அநுர அரசு கூறினால் “நாம் இலங்கையர்” என்ற நாடகம் காட்டினாலும் அது இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தப்போவதில்லை என்பதே உண்மை.



