இலங்கையை கட்டியெழுப்ப புதியதொரு திட்டம்!

இலங்கையின் அண்மைய வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றான ‘டிட்வா’ புயலால் ஏற்பட்ட பெரும் சேதத்தைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக, ஜனாதிபதி செயலகத்தின் கீழ் சட்டப்பூர்வமாக ‘Rebuilding Sri Lanka’ நிதியத்தை நிறுவ அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்த நிதியத்தைச் செயற்திறனுடன் முகாமைத்துவம் செய்வதற்கு, தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில், ஒரு முகாமைத்துவக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி, மேல் மாகாண ஆளுநர், நிதி அமைச்சின் செயலாளர், ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர், வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டோர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேவைகளை மதிப்பிடுதல், நிதியை ஒதுக்குதல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மீட்பு நடவடிக்கைகளுக்கு நிதி விடுவித்தல் போன்ற பொறுப்புகளுடன், நிதி நடவடிக்கைகளில் முழுமையான வெளிப்படைத்தன்மையை இந்த குழு உறுதி செய்யும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்கள் தமது நிதி உதவிகளை இலங்கை ரூபாவிலோ அல்லது வேறு எந்த நாணய அலகிலோ வைப்பு செய்ய முடியும். மேலும், நன்கொடையாளர்கள் இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணயக் கணக்குகளில் நேரடியாக நிதியை வைப்புச் செய்யவும் முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.