இலங்கையில் தற்போது ஏற்பட்ட பேரிடர் நிலைமை தொடர்பாக அரசாங்கத்துக்கு எதிராக குற்றவியல் வழக்கு தொடர உள்ளதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, குறித்த பேரிடர் நிலைமை 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல்களைப் போன்று தீவிரமான சம்பவம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ராஜபக்ஷக்கள் நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டுசென்றமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றவியல் வழக்கைப் போன்று, தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராகவும் வழக்குத் தொடரவுள்ளதாக மரிக்கார் கூறியுள்ளார்.
பேரிடரில் உயிரிழந்த ஒவ்வொரு பிரஜைக்கும் அவர்கள் பொறுப்பு கூறவேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். பேரிடர் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியமைக்காக வழக்கு தொடரப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



