இலங்கைக்கு இரங்கலையும் உதவிகளையும் அறிவித்த உலக நாடுகள்!

இலங்கையில்  நிலவிய அதிதீவிர வானிலைக் காரணமாக, ஏற்பட்ட சேதங்களிலிருந்து இலங்கையை மீட்டெடுப்பதற்கு, சுமார் 31 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
டிட்வா புயல், நாட்டின் மூன்றில் ஒரு பகுதியை நாசமாக்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட , இலங்கையை மீட்டெடுக்கச் சர்வதேச நாடுகள் முன்வந்துள்ளன. அதன்படி, நிதி மற்றும் பொருள் ரீதியான நிவாரண உதவிகளை சில நாடுகள் வழங்கியுள்ளன.

அதற்கமைய, சர்வதேச மனிதாபிமான நட்பின் ஊடாக, நியூசிலாந்து, அவசர மனிதாபிமான நிவாரணத்தை ஆதரித்து, ஒரு மில்லியன் நியூசிலாந்து டொலரை நன்கொடையாக வழங்கியுள்ளது. இதனிடையே, டிட்வா புயலால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து இலங்கை மீள்வதற்காக பிரித்தானியாவும் அவசர நிவாரண நிதி உதவியை வழங்குவதாக அறிவித்துள்ளது.

அதன்படி, எட்டு இலட்சத்து 90 ஆயிரம் அமெரிக்க டொலர் நிவாரண நிதியை இலங்கைக்கு வழங்குவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. குறித்த நிதியானது செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான அமைப்பு மற்றும் உள்ளூர் பங்காளிகளுடன் இணைந்து அவசரப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் உதவிகளை வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படும் என்றே இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை தொடர்பில் கவலையை வெளிப்படுத்தியுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா (Kristalina Georgieva) இலங்கையின் மீட்சிக்கும் மீளெழுச்சிக்கும் அவசியமான ஆதரவை வழங்குவதற்குச் சர்வதேச நாணய நிதியம் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சமூகங்களுடனும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான உதவிகளை வழங்கிவரும் மீட்புப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்களுடனும் தாம் உடன் நிற்பதாக தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கு 50 ஆயிரம் அமெரிக்க டொலரை நன்கொடையாக வழங்கவுள்ளதாக மாலைதீவின் வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது. அதேநேரம், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு, ‘டிட்வா’ புயலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பாரிய அழிவுகள் குறித்து தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
நெருக்கமான மற்றும் நம்பிக்கைக்குரிய நண்பனாக, இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் இந்தியா வலுவான ஆதரவை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், இயல்பு நிலைக்குத் திரும்பும் முயற்சிக்கும், எதிர்வரும் நாட்களில் இந்தியா இலங்கையுடன் தொடர்ந்து துணை நிற்கும் என்றும் இந்திய பிரதமர் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, தென்கிழக்கு ஆசியா முழுவதும் கடுமையான புயல்களால் ஏற்பட்ட பேரழிவால் தானும் தனது மனைவியும் மிகுந்த வருத்தமடைந்துள்ளதாக பிரித்தானியாவின் மூன்றாம் மன்னர் சார்லஸ் (Charles) கவலை வெளியிட்டுள்ளார்.

இந்த புயல், பாதிக்கப்பட்ட அனைவரின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் எவ்வளவு பாதித்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.

இந்த கடினமான நாட்களில் அவசர நிலைகளுக்குத் துணிச்சலுடன் பதிலளித்து அத்தியாவசிய உதவிகளை வழங்கும் அனைவரையும் பாராட்டுகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாட்டில் பேரிடரால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பெரும் சேதம் தொடர்பில் ரஷ்யா தனது இரங்கல்களைத் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் தனது இரங்கலை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு அனுப்பியுள்ளார். இந்த கடினமான காலகட்டத்தில் இலங்கையுடன், ரஷ்யா ஒன்றித்து நிற்பதாகவும் அந்நாட்டு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.