இலங்கையின் அனர்த்தம் குறித்து மார்க்-அன்ட்ரூ பிரான்சே கருத்து

இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து தேசிய மீட்புப்பணிகள் மற்றும் உடனடி மீட்சிக்கான முயற்சிகளுக்குப் பங்களிப்புச்செய்வதை முன்னிறுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் கிளைக்கட்டமைப்புக்களுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி செயற்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க்-அன்ட்ரூ பிரான்சே தெரிவித்துள்ளார்.

‘தித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் இலங்கை பேரழிவுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், இக்கடினமான வேளையில் இலங்கையுடனான உடன்நிற்பை வெளிப்படுத்திவரும் சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்கள், இலங்கைக்கு நிவாரண உதவிகளையும் வழங்கி வருகின்றன

இந்நிலையில் இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து தேசிய மீட்புப்பணிகள் மற்றும் உடனடி மீட்சிக்கான முயற்சிகளுக்குப் பங்களிப்புச்செய்வதை முன்னிறுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் கிளைக்கட்டமைப்புக்களுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி செயற்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க்-அன்ட்ரூ பிரான்சே தெரிவித்துள்ளார்.

அத்தோடு இலங்கையில் பாதிக்கப்பட்ட சகல சமூகங்களுடனும் தாம் உடன்நிற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இலங்கையின் அனர்த்தம் குறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அசூஸா குபோட்டா, ‘அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களின் தீவிரத்தன்மை குறித்து நாம் கண்டறிந்துவரும் நிலையில், தவறான மற்றும் போலியான தகவல்கள் இலகுவாகப் பரவக்கூடிய சாத்தியம் உள்ளது. எனவே பாதிக்கப்பட்டுள்ள இடங்கள், மீட்சிப்பணிகள், அத்தியாவசியப்பொருட்கள் என்பன தொடர்பில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர்வதைத் தவிர்ப்போம். மாறாக உண்மையான, நம்பத்தகுந்த மூலங்களில் இருந்து கிடைக்கப்பெறும் தகவல்களை மாத்திரம் பகிர்வோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதுமாத்திரமன்றி இந்நெருக்கடி நிலையில் காலநிலை தொடர்பில் பகிரப்படும் உண்மைக்குப் புறம்பான தகவல்களை மறுதலிப்பதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுப்பட்டுள்ள ஆரோக்கியமான நடவடிக்கைகளைப் பாராட்டுவதாகவும், இது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி மிகமுக்கிய நகர்வு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.