பேரினவாதத்தின் பெருவெற்றி மனித உரிமையின் படுதோல்வி

206
101 Views

சிங்கள பௌத்த பேரினவாதம் முழு அளவிலான தனது வாக்குப் பலத்தை வெளிப்படுத்தி தன் சார்பாக தமிழின அழிப்புகளுக்கு 2009 இல் தலைமையேற்ற ஒருவரையே பத்தாண்டுகளின் பின்னரும் நன்றியோடு தன் தலைவராக மட்டுமல்ல இலங்கைத் தீவின் அரசஅதிபராகவும் நிறுவிக் கொண்டு விட்டது. இது சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பெரு வெற்றியாக அமைகிற அதே நேரத்தில் இலங்கையில் மனித உரிமையின் படுதோல்வியாகவும் மாறியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்நிலை மனித உரிமைகளை மீறிவிட்டு இனமத உணர்ச்சிகளைத் தூண்டி அதனை அவற்றின் வெற்றியாகக் காட்டித் தப்பிக்கலாம் என்னும் தவறான அரசியல் போக்கை உலகுக்கு வெளிப்படுத்தி உலகின் மனித உரிமைக்கும் பேராபத்தை ஏற்படுத்தியுள்ளது.

1978 இல் அன்றைய இலங்கை அரச அதிபராக இருந்த ஜே. ஆர் ஜயவர்த்தனா தமிழ்பேசும் மக்களில் தங்காத சிங்களத் தலைமையாக இலங்கை அரச அதிபர் இருக்க வேண்டுமென உருவாக்கிய நிறைவேற்று அதிகாரம் உள்ள அரச அதிபர் முறையும் அந்த அரச அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் முறைமையும் தமிழ் பேசும் மக்களின் பாராளுமன்றம் வழியான சட்டவாக்க உரிமையையும் அமைச்சரவை வழியான நிர்வாக உரிமையையும் இல்லாதொழிப்பதற்கான சனநாயக வாயில்களைத் திறந்தன.

கிட்லர் எப்படிப் பாராளுமன்ற முறைமையைப் பயன்படுத்தியே சர்வாதிகார ஆட்சிமுறைமையைத் தோற்றுவித்தானோ அத்தகையதே அன்றைய ஜே. ஆர் ஜயவர்த்தானாவின் இந்த நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமை. அந்த முறைமையின் முழு அளவிலான வெற்றியாக 2009 இலங்கை அரச அதிபரின் தேர்தல் முடிவுகள் இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் வாக்குத் தேவைகளின்றி சிங்களத் தலைமை அமையலாம் என்பதை நிறுவி ஜே. ஆர். ஜயவர்த்தனா கண்ட கனவை நனவாக்கியுள்ளது.

இந்த இலங்கை அரச அதிபர் தேர்தல் முறைமையில் இலங்கையை பல்லின பல்கலாச்சார நாடாக விளங்குவதற்கான தேவையில்லை என்பதை சிங்களப் பௌத்த பேரினவாதத்திற்கு எடுத்துரைப்பதினாலேயே பௌத்த பிக்குகளே நேரடியாகத் தமிழ்பேசும் மக்களில் தங்கியில்லாத தலைமையை உருவாக்கக் கனவு கண்டோம் உருவாக்கி விட்டோம் என மகிழ்ச்சி கொண்டாடுவதும் அல்லாமல் இஸ்லாமிய நூல்களை பள்ளிகளின் பாடத்திட்டங்களில் நின்று அகற்றுமாறும், ஒருநாடு ஒரு சட்டம் ஒரு தேசம் என்பது கொள்கையாகட்டும் எனறும் தேர்தல் வெற்றியை அடுத்துப் பேசியுள்ளமை இலங்கையின் அனைவருக்குமான வழிபாட்டு உரிமை என்னும் அடிப்படை மனித உரிமை மறுப்பாகவும் சர்வாதிகார முறைமையைத் தோற்றுவிப்பதற்கான அழைப்பாகவும் அமைகின்றன.

சில நாடுகளில் இருப்பது போல் பாராளுமன்ற சனநாயக ஆட்சி முறை என்ற போர்வையுள் இராணுவ ஆட்சியொன்று இலங்கையில் தோற்றுவிக்கப்படாது தடுக்கும் உடனடித் தேவை ஐக்கிய நாடுகள் சபைக்கு ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர் -இலக்கு மின்னிதழ்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here