அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையி லான பாதுகாப்பு உறவுகளைப் பலப் படுத்தும் விதமாக, இலங்கை–அமெரிக்கா பாது காப்பு புரிந்துணர்வு உடன்பாடு கடந்த நவம்பர் 14அன்று கொழும்பில் கையெழுத்தாகியுள்ளது.
ஆரம்பத்தில் இரகசியமாக வைக்கப்பட்டி ருந்த இந்த உடன்பாடு, பொதுமக்களின் மற்றும் சிவில் சமூகக் குழுக்களின் கோரிக்கைக்கு இணங்க தற்போது குறித்த உடன்பாடு முழுமையாக பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு உடன்பாடானது, அமெரிக்காவின் அரச கூட்டுத்திட்டத்தின் கீழ் உத்தியோகபூர்வமாக மேம்படுத்தப்பட்ட பாது காப் புக்கட்டமைப்பை உருவாக்குகிறது. இதன் மூலம் இலங்கையின் ஆயுதப் படைகள், அமெரிக்கா வின் மொன்டானா தேசிய காவல்படை மற்றும் அமெரிக்க கடலோரக் காவல்படை ஆகியவற்று டன் இணைந்து செயற்படுவதற்கு வழி சமைக்கிறது. இந்த உடன்படிக்கையில் அமெரிக்கா சார்பாக அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் பிரிகேடியர் ஜெனரல் ட்ரென்டன் கிப்சன் ஆகியோரும் இலங்கை சார்பாக பாதுகாப்புச் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துய கொந்தவும் கைச்சாத்திட்டுள்ளனர்.
குறித்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், இந்தியா மற்றும் சீனாவுடன் செய்யப்பட்ட பாதுகாப்பு உடன்பாடுகளை தொடர்ந்து, மற்றொரு முக்கியமான வெளிநாட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தமாக அமெரிக்காவுடனான உடன்பாடு காணப்படுகின்றது, இந்நிலையில் தற்போது பாராளுமன்றின் ஊடாக வெளியிடப்பட்ட புரிந்துணர்வு உடன்பாடு, இரு நாடுகளுக்கிடையேயான விரிவானதொரு பரஸ்பர ஒத்துழைப்புக் கட்டமைப்பை வெளிப் படுத்துவதாக உள்ளது.
அத்துடன் குறித்த உடன்பாடானது 11 விடயங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. முதலாவதாக, விமான நடவடிக்கைகள், பராம ரிப்பு மற்றும் பாதுகாப்பாகும். இது அமெரிக்க விமானப்படையின் செயல்பாடுகளை இலங்கைக் குள் விரிவுபடுத்துவதற்கும், தளவாட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் வழிவகுக்கும் முக்கியமான அம்சமாகும்.
இரண்டாவதாக, கடல்சார் கள விழிப் புணர்வாகும். இலங்கையின் புவிசார் மூலோபாய முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, சட்ட விரோத கடத்தல், ஒழுங்கற்ற குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு போன்ற கடல்சார் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் கண்காணிப்பு மற்றும் பதிலளிப்பு திறன்களை வலுப்படுத்துவது ஒரு முக்கிய முன்னுரிமையாக உள்ளது.
மூன்றாவதாக, சைபர் பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு பாதுகாப்பாகும். இந்த ஒத்துழைப்பு பரந்த தளங்களைக் கொண்டுள்ள தோடு இலங்கைக்குச் சாதகமான அம்சங்களைக் கொண்டு வருவதுடன், அமெரிக்காவுக்குத் தேவையான தகவல்களைப் பெறுவதற்கும் வழிவகுக்கும். நான்காவதாக, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் அல்லது அவசரகால பதிலளிப்பா கும். இது காலநிலை சார்ந்த பேரிடர்களுக்கு இலங்கை ஆளாகும் தன்மையைக் கருத்தில் கொண்டு, வெள்ளம், நிலச்சரிவுகள் போன்ற இயற்கை அனர்த்தங்களின் போது இரு தரப்புப் படைகளுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான கூட்டுப் பயிற்சிகள் திட்ட மிடப்பட்டுள்ளன.
ஐந்தாவதாக தலைமைத்துவம் மற்றும் பணியாளர் மேம்பாட்டு விடயம் காணப்படுவ தோடு ஆறாவதாக, இராணுவ மருத்துவம் மற்றும் பொறியியல் நடவடிக்கைகள் காணப்படுகின்றன. ஏழாவதாக செயற்பாட்டு தளபாடங்கள் மற்றும் அமைதிகாக்கும் நடவடிக்கைகள் உள்ளன. அமைதி காக்கும் நடவடிக்கைகளின் போது விநி யோகத் தேவைகளுக்கு இலங்கையை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை இது உருவாக்குகிறது.
எட்டாவதாக இரசாயன, உயிரியல், கதிரியக்க, அணு விடயமும் ஒன்பதாகவதாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பும் பத்தாவதாக, கலாசார பரிமாற்ற திட்டங்களும் பதினொராவதாக, பரஸ் பரம் முடிவு செய்யப்படும் வேறேதும் பரப்புக ளும் காணப்படுகின்றன.
இந்த உடன்பாடு செய்யப்பட்டதன் பின்னர், இலங்கையின் தேசிய பாதுகாப்பு முன்னுரிமைகளை சமரசம் செய்யாமல், அதன் திறன்களை பலப்படுத்தும் ‘முன்னோக்குச் சிந்த னையுள்ள’ கூட்டுறவாக இருக்கின்றது என்று பாதுகாப்புச்செயலாளர் சம்பத் துயகொந்த குறிப்பிட்டுள்ளார்.
இப்புரிந்துணர்வு உடன்பாடு சட்டப்பூர்வ மாக காணப்படாத விடயமாக இருக்கின்றபோதும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். ஐந்து ஆண்டுகளின் பின்னர் உடன்பாட்டில் பங்கேற்ற தரப்பினர் விலகாது விட்டால் அது மீண்டும் புதிப்பிக்கப்படும்.
இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்ட மையானது சில கேள்விகளை எழுப்புவதற்கு வழிசமைப்பதாக உள்ளது. முதலாவதாக, அமெரிக் கப் படைகளை நிலை நிறுவத்துவது தொடர் பான உடன்பாடான ‘சோபா’வுக்குள் பிரவேசிப் பதற்கான ஒரு திறவுகோலாக இருக்குமா என்ற சந்தேகத்தையும், நாட்டின் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை அமெரிக்கா தனது தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் சூழலை ஏற்படுத்துமா என்ற கேள்விகளையும் உருவாக்கியுள்ளது.
சோபா ஒப்பந்தம், அமெரிக்கப் படை களுக்கும் சிவிலியன் பணியாளர்களுக்கும் இராஜதந்திர சலுகைகளுக்கு நிகரான ‘சிறப்புரி மைகள், விலக்குகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அது இலங்கையின் தேசிய இறையாண்மைக்கு எதிரானது என்று அப்போது எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்து கூறியது தற் போதைய ஆட்சியாளர்கள் தான். அந்த வகையில் குறித்த ஒப்பந்தம் பற்றி தென்னிலங்கை மக்களி டையே சந்தேகங்கள் வலுத்து வருகின்றன.
இரண்டாவதாக, இந்த உடன்பாடு கையெழுத்தானமைக்கு, இலங்கைக்கும் அமெரிக் காவுக்கும் இடையில் காணப்பட்ட தற்போதைய நெருக்கமான உறவுகளின் பின்னணியில் நிகழ்ந்துள் ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, இலங்கை பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி விதித்த 44சதவீத வரி, சமீபத்தில் 20சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்பானது, பாதுகாப்பு உடன்பாட்டைச் செய்துகொள்ள இணங்கியதால் கிடைத்ததா என்ற மர்ம முடிச்சு இன்னமும் அவிழ்க்கப்படவில்லை.
இதேநேரம், இந்தோ-பசிபிக் பிராந்தியத் தில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கைக்க ட்டுப்படுத்துவதற்கான பரந்த அமெரிக்க மூலோபாயத்தில், காணப்படுகின்ற நிலையில் அவற்றுக்கு செயல் வடிவம் கொடுப்பதாக இருந்தால் கேந்திர ஸ்தானத்தில் உள்ள இலங்கை யின் வலுவாக காலூன்றுவது அவசியமாகின்றது.
அந்தவகையில் அதிகரித்துள்ள அமெரிக்கா வின் ஆர்வத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங் கமானது தனது நலனுக்கு பயன்படுத்தவே முனைகின்றது. குறிப்பாக, அமெரிக்காவின் சர்வதேச ரீதியான பாதுகாப்பு உறவுகளின் குறித்த நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு நெருக்கம் சர்ச்சைக்குள்ளாகியிருந்தாலும், இரண்டு தரப்புக ளும் தங்களுக்குள்ள தேவைகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன.
அந்த வகையில் பார்க்கின்றபோது, அமெரிக்காவுடனான புரிந்துணர்வு உடன்பாடு, இருநாடுகளினதும் பாதுகாப்பு உறவுகளில் முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. இதன் வெளிப்படையான வெளியீடு, ஆரம்பகால கவலைகளை குறைப்பதற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும் இந்த உடன்பாட்டின் கீழ் முதலாவது கூட்டுச் செயற்பாடுகள் 2026ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஆரம்பிப்பதற்கு திட்ட மிடப்பட்டுள்ளன. அவ்வாறு செயற்றிட்டம் ஆரம்பிக்கப்படுகின்றபோது ஒப்பந்தத்தின் பிரகாரம் அமெரிக்க பாதுகாப்புத் துறையினரின் இயல்பான பிரசன்னம் அதிகளவில் காணப்படும்.
அப்போது தான், இந்தியாவும், சீனாவும் இலங்கையை மையப்படுத்திய தமது மூலோபா யத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக களமாடும் நிலை உருவெடுக்கும். அப்போது இலங்கையின் ஆட்சி அதிகாரமும், இராஜதந்திரங்களும் பல விசித்திரங்கள் நிறைந்தவையாக இருக்கும்.



