மாவிலாறு நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு 13 இடங்களில் உடைப்பெடுத்துள்ளது.
இதன்காரணமாக, குறித்த பகுதியில் உள்ள மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்
இதேவேளை, சேருவில ரஜமஹா விகாரை ஒரு பாதுகாப்பான இடமாகப் பெயரிடப்பட்டுள்ளது.
அதேநேரம், திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டு உடைப்பை அடுத்து மூதூர் நகரம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
கங்கையின் பெருக்கெடுப்பும் மாவிலாற்றின் உடைப்பும் குளங்களின் வான் திறப்பும் மக்களின் இயல்பு வாழ்வைப் பெருமளவு பாதித்துள்ளன திருகோணமலை மூதூர் பிரதான தரைவழிப் பாதை உடைப்பெடுத்துள்ளது.
வயல் வெளிகள் யாவுமே கடல்போல் காட்சியளிப்பதாக கூறப்படுகிறது. இதேவேளை, திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டில் நீர் மேவியதால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்ட 250க்கும் மேற்பட்டோர் இலங்கை விமானப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
இலங்கை விமானப் படைக்கு சொந்தமான பெல் – 412 மற்றும் MI-17 உலங்கு வானூர்திகள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, சீரற்ற வானிலைக்கு மத்தியில், யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு புன்னையடி பகுதியில் கால்நடைகள் இறந்து கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், மன்னார் மாவட்டத்தில் நிலவும் காற்றுடன் கூடிய மழையுடனான வானிலையால், ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. நானாட்டான், மடு, மற்றும் மாந்தை மேற்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



