மாவீரர் நாள் இன்று (27) அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் யாழில் உள்ள வர்த்தக நிலையங்களை பிற்பகல் 2 மணியுடன் மூடுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் மாவீரர் நாள் நிகழ்வில் பங்கு பற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகரசபை உறுப்பினர்களுக்கும், யாழ். வணிகர் கழக பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (26) இடம்பெற்றது.
இதன்போது குறித்த கோரிக்கை நேரில் எழுத்துமூலமாக முன்வைக்கப்பட்டது. அவர்கள் இது தொடர்பில் சாதகமான வாக்குறுதிகளை தந்துள்ளதாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் இரத்தினம் சதீஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்றைய தினம் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவுள்ள நிலையில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் அதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி தமிழர் தாயகத்தில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன.
அத்துடன் நினைவாலயங்களில் மண்ணுக்காக உயிர் துறந்த மாவீரர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய நினைவு சின்னங்களும் வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக வல்வெட்டித்துறை போன்ற பகுதிகளில் மாவீரர் நாள் கண்காட்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சில இடங்களில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்பவர்களின் பெயர் விபரங்களை காவல்துறை திரட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அரசாங்கம் உத்தியோகபூர்வமாக நினைவேந்தலுக்கு தடை இல்லை என்று கூறுகின்ற போதிலும் சில இடங்களில் காவல்துறையினரின் இந்த செயற்பாடு தொடர்பில் மக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.



