மாகாண சபைத் தேர்தலை துரிதமாக நடத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தினதும் நோக்கமாகும். எவ்வாறிருப்பினும் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்துக்கு அப்பால் சென்று அதனை நடத்த முடியாது. பாராளுமன்றத்தால் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே தேர்தலை நடத்த முடியும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மாகாண சபைத் தேர்தலுக்காக பழைய சட்டமும் காணப்படுகிறது. புதிய சட்டமொன்றும் காணப்படுகிறது. குறித்த புதிய சட்டம் பாராளுமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த கால கட்டத்திலேயே இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நடைமுறையிலுள்ள இந்த சட்டத்துக்கமைய செயற்பட நடவடிக்கை எடுத்தாலும், அதற்கான எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே சட்டம் நடைமுறையிலிருந்தாலும் எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்படாதமையால், தேர்தலை நடத்த முடியாது. எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்படாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதும் குறித்த சட்டத்தில் தெரிவிக்கப்படவில்லை. எனவே இந்த காரணிகளை அடிப்படையாகக் கொண்டு புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை இனங்காணப்பட்டுள்ளது. இது பாராளுமன்றத்தால் முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கையாகும்.
விருப்பு வாக்கு முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு காணப்படுகிறது. தமது தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரே தமக்கான பிரதிநிதியாக வர வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகும். அதற்கமையவே புதிய சட்டம் தயாரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும் அதற்கமைய எல்லை நிர்ணய நடவடிக்கைகள் இடம்பெறாமையால், புதிய சட்ட உருவாக்கத்துக்கான வாய்ப்புக்கள் பாராளுமன்றத்தில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
அந்த நடவடிக்கைகள் நிறைவடைந்தால் கூடிய விரைவில் பாராளுமன்றத் தேர்தலை நடத்த முடியும். மாகாணசபைகள் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பல உள்ளன. மாகாணசபைகளுக்காக 2026 வரவு – செலவு திட்டத்தில் 76 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தோடு 532 பில்லியன் ரூபா புனரமைப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் இருக்கும் பட்சத்தில் இந்த நிதி ஒதுக்கீடுகளின் ஊடாக அபிவிருத்தி வேலைத்திட்டங்களை இலகுவாக முன்னெடுத்துச் செல்ல முடியும்.
மாகாணசபைத் தேர்தலை துரிதமாக நடத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தினதும் நோக்கமாகும். எவ்வாறிருப்பினும் தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்துக்கு அப்பால் சென்று அதனை நடத்த முடியாது. பாராளுமன்றத்தால் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே தேர்தலை நடத்த முடியும். மாறாக எவராவது ஒருவர் வந்து தேர்தலை பழைய முறைமையில் நடத்துமாறு கோரினால், அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப தேர்தலை நடத்த முடியாது என்றார்.



