
வானத்தில் எழுந்தொளிர்ந்து வளைந்து நீண்ட
பகலவனே இன்றுனக்குத் தான்கொண்டாட்டம்
ஈனமுற வாழ்ந்துநின்ற தமிழர்தம்மை
ஈழமென்னும் நாட்டினிலே நிமிர்ந்துநின்று
மானமுடன் வாழவைத்துப் பேணுபவன்
பிறந்தநாளில் மகிழுகின்றார் தமிழினத்தார்
தேனமுதக் கவிபாடி வாழ்த்துகின்றோம்
எங்களிறை கரிகாலன் வாழ்க நீடு
இருளுண்ட தமிழர்களும் மருண்ட வேளை
இனவாதம் மக்களுயிர் அழித்த வேளை
கருவறுக்கும் சிங்களவர் குடியேற்றத்தால்
கரையில்லா வறுமையினு ளாழ்ந்தவேளை
ஒருமுடிவி லாயுதத்தைக் கைக்கெடுத்து
அணிதிரட்டித் தலைநிமிர்த்தித் தட்டிக்கேட்டு
மிரட்டியவர் உடலேறி மிதித்துநின்று
களமாடும் கரிகாலன் வாழ்க நீடு
தமிழீழம் படைப்பதற்கு எழுந்தோர் பல்லோர்
தம்வயிறு வளர்த்துடலிற் பெருத்து நின்றார்
சுமைதாங்கிப் பொறுப்பேற்கும் பண்பில்லாதோர்
கொத்தடிமையாகிக்கை யேந்திவாழ்ந்தார்
எமக்கென்றோர் நாடமைத்து வாழ்வதற்கே
எமனுக்கு மஞ்சாத நெஞ்சத்தோடு
சமைக்கின்றான் தமிழீழம் பகைவியக்க
விழிவிரிந்து வியக்கின்றார் உலகத்தாரே
வீதிகளில் வளருகின்ற மரங்கள் தம்மில்
தளிரெறிய முகையவிழ்க்கும் மலர்களுண்டு
ஊதியிசை யெழுப்புகின்ற வண்டினங்கள்
பிரபாவின் புகழ்பாடிக் களிக்கும் வேளை
சோதிமிகு ஒளியெறிந்தே யுலாவிநிற்கும்
பால்நிலாவும் வேங்கைகளின் ஆற்றல் கண்டு
சாதனையின் தளபதியாம் தலைவன்தன்னைச்
சுடரொளியால் அரவணைத்து வாழ்த்துப் பாடும்
கானகத்தில் பொன்வண்ணச் சிறகுயர்த்தி
எழில்பெருக நடனமாடும் மயிலின்கூட்டம்
கானமழை காற்றினிலே இசையெழுப்ப
கயல்விழியார் காளையரின் அணிநடையை
தானைகளின் தலைவனவன் ஏற்றிடுமோர்
மேன்மையுறு நிகழ்வினுக்காய் ஒன்றிணைந்து
வானதிரும் வாழ்த்தொலியி னோசையோடு
விரைந்தொன்றாய்த் தோகைவிரித்தாடும் தானே



