இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை அங்கீகரிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதனை இலங்கை உயர்ஸ்தானிகரகம் எதிர்க்கின்றது என்று கனடாவின் பிரம்டன் நகர முதல்வர் பற்ரிக் பிரவுன் (Patrick Brown) தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இனவழிப்பே இடம்பெறவில்லை என்பது போல் சித்தரிப்பதற்கும், வரலாற்றை அழிப்பதற்கும், தமிழர்களின் குரல்களை ஒடுக்குவதற்கும் விரும்புபவர்கள் கொழும்புக்கே திரும்பிச் சென்றுவிடலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவின் பிரம்டன் நகரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலிக்கொடியை அங்கீகரித்திருப்பதுடன் அதற்கான பிரகடனத்தை பிரம்டன் நகர முதல்வர் உத்தியோகபூர்வமாக அண்மையில் வெளியிட்டு வைத்தார்.
இந்தநிலையில் கனடாவில் உள்ள தமிழர் அமைப்பொன்றினால் நடத்தப்பட்ட நிகழ்வு ஒன்றில் பங்கேற்று கருத்துரைத்தபோது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கும், அவர்களது குரல்கள் நசுக்கப்படுவதற்கும் மத்தியில் பிரம்டன் நகரம் தமிழ் மக்களுடன் உடன்நிற்கின்றது. தமிழர்கள் அவர்களது அன்புக்குரியவர்களை இழந்தனர். துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டதுடன் பல்வேறு வகையிலும் உயிரச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்தனர்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இனவழிப்பு, நாம் வாழும் காலத்தில் பதிவான மிகமோசமான மனிதப்பேரவலமாகும் என்றும் பிரம்டன் நகர முதல்வர் பற்ரிக் பிரவுன் (Patrick Brown) தெரிவித்துள்ளார்.
ஆனால் இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை அழிப்பதற்கான பல்வேறு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறானதொரு பின்னணியில் தமிழீழக்கொடி ஏற்றப்படுவதானது தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு தொடர்பான உண்மைகள், அவர்களது கலாசாரம், அடையாளங்கள் என்பன அழிக்கப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என்பதைக் காண்பிக்கும் குறியீடாகும் என்றும் பிரம்டன் நகர முதல்வர் பற்ரிக் பிரவுன் (Patrick Brown) தெரிவித்துள்ளார்.



