தமிழகத்தின் திருச்சி, கொட்டப்பட்டு மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பம் ஒன்றுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது குறித்து இரண்டு மாதங்களுக்குள் பரிசீலிக்குமாறு மத்திய உள்துறை மற்றும் வெளிவிவகார அமைச்சுகளுக்கு மதுரை மேல் நீதிமன்றக் கிளை அண்மையில் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, தனக்கும் தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் எனக் கோரி நபர் ஒருவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். குறித்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நபர் தனது மனுவில், தான் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு இலங்கையில் பிறந்தவர் என்றும், அவரது மூதாதையர்கள் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக இலங்கைக்கு இடம்பெயர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியக் குடியுரிமை வழங்குமாறு கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு 2020 ஜூலை 20 அன்று ஒரு கோரிக்கையைச் சமர்ப்பித்த போதிலும், அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். எனவே, அதிகாரிகள் தங்களை தாயகம் திரும்பியவர்களாக அங்கீகரித்து நிவாரணம் வழங்க உத்தரவிடக் கோரி அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



