ஜனாதிபதியின் திட்டத்தை ஆதரிக்கும் எதிர் தரப்பு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்!

இலங்கை எந்தவொரு இனவாத வலையிலும் சிக்குவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிக்குமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதன் மூலம் நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையை உருவாக்கும் நோக்குடன், அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்து இந்த ஆண்டு டிசம்பரில் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ள ‘இலங்கை தின’ நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கவும், கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்ளவும் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து இந்த கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்படுவதை இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் பிரதிநிதிகளும் பாராட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்படும் போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தோற்கடிப்பதற்கான தேசிய செயற்பாடு மற்றும் தேசிய, மத ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் ஆகியவற்றுக்கு நிபந்தனையின்றி தாம் ஆதரவளிப்பதாகவும் அவர்கள் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல், மத மற்றும் கலாசார பன்முகத்தன்மைக்கு அப்பால், அனைவரும் ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணைந்து செயல்படக்கூடிய வகையில் இந்த நிகழ்ச்சிகளையும் செயற்திட்டங்களையும் உருவாக்குமாறு ஏற்பாட்டுக் குழுவுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை “இனவாதத்தை ஒழிக்க, ஜனாதிபதி கோரும் ஒத்தாசைகளை முழுமையாக வழங்குவோம்.” “நாட்டின் அனைத்து இன, மத, மொழி, தனித்துவங்கள் பேணி பாதுகாக்கப்பட வேண்டும்” என்று பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடனான சந்திப்பு தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில், அனைத்து பிரிவினருக்கும் இடையில், உரிமைகளின் சமத்துவம் இருக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.