நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் உள்ள செயிண்ட் மேரிஸ் கத்தோலிக்க பாடசாலையில் துப்பாக்கியுடன் நுழைந்த ஆயுதக்குழுவினர் 215 மாணவர்களையும் 12 ஆசிரியர்களையும் கடத்திச் சென்றுள்ளனர்.
மாணவர்கள் கடத்தப்பட்ட விவகாரத்துக்குப் பின், நைஜீரிய பாதுகாப்பு படைகள் நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுதியுள்ளனர்.
காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் கடத்தப்பட்டவர்களைத் தேடி வனப்பகுதிகளில் விரிவான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடத்தப்பட்டவர்களில் 7 முதல் 10 வயது குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தையடுத்து, பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்தக் கடத்தல் சம்பவத்துக்குப் பின்னர் நைஜீரிய ஜனாதிபதி போலா டினுபு, தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் G20 உச்சி மாநாட்டுக்கான பயணத்தை இரத்து செய்துள்ளார்.
இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னர், வடமேற்கு நைஜீரியாவின் கெப்பி மாநிலத்தில் 25 பாடசாலை மாணவிகள் கடத்தப்பட்டனர். அவர்களில் ஒருவர் தப்பி வந்துள்ளார்.
மேலும், இந்த வாரம் மேற்கு நைஜீரியாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் நடைபெற்ற திடீர் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டு, பலர் கடத்தப்பட்டுமுள்ளமை குறிப்பிடத்தக்கது.



