வடக்கு – கிழக்கு மாகாணங்களை ஆளுநரிடம் கையளித்து விட்டு இருப்பது என்பது ஜனநாயக விரோத செயல் என்றும் தமிழ் மக்களுக்கு கிடைத்த உரிமைகள் அரசாங்கம் மறுதலிக்கிறது என்பதே இதன் பொருள் என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
யாழில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார். இலங்கை தமிழரசு கட்சியினர் ஜனாதிபதியுடன் சந்தித்து பேசி இருக்கிறார்கள் என்றும், சில விடயங்களை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் சிலவற்றுக்கு அவகாசம் வேண்டுமென சொல்லி இருப்பதாக தெரிகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜனவரி மாதத்தில் இருந்து ஒரு தீர்வு திட்டம் தொடர்பாக பேசலாம் என ஜனாதிபதி கூறியிருக்கிறார் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு கிழக்கு பிரதேசங்களை சிங்கள பௌத்த பிரதேசங்களாக மாற்றும் செயற்பாடுகள் கடந்த அரசாங்கங்களினாலும் தற்போதைய அரசாங்கத்தினாலும் முன்னெடுக்கப்படுகின்றன.
யுத்தத்திற்கு பின்னர் வடக்கிலும் கிழக்கிலும் பல இடங்களில் புத்தர் விகாரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
சிங்கள மக்கள் இல்லாத இடங்களிலும் கூட இவ்வாறான பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயக பிரதேசம் என்று இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கூட சொல்லப்பட்டு இருக்கிறது.
எனவே வடக்கு கிழக்கு என்பது குறைந்தபட்சம் மதசார்பற்ற பிரதேசமாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழ் மக்கள் அதிகமாக வாழும் வடக்கு கிழக்கில் பௌத்த மதத்திற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டிய எந்தத் தேவையும் இல்லை என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.



