திருகோணமலையில் தற்போது நடந்துவரும் சம்பவங்களைக் கடுமையாகக் கண்டிப்பதாக கனடியத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
பௌத்தத்தின் போர்வைக்குள் அச்சுறுத்தல் மற்றும் பலவந்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களிடையே அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்து கனடியத் தமிழர் பேரவை இதனைக் குறிப்பிட்டுள்ளது.
சட்டவிரோத நிர்மாணத் திட்டங்களுக்கு இலங்கை அரசாங்கம் துணைபோவது குறித்து பேரவை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் சமூகங்களின் தெளிவான ஆட்சேபனைகள் இருந்தபோதிலும் இந்தக் கட்டுமானம் மேற்கொள்ளப்படுகிறது. அச்சுறுத்தல் மற்றும் பலவந்தமான இந்த முறை, அப்பகுதியில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் மீண்டும் இலங்கையில் இரண்டாம் தரக் குடிமக்களாகவே நடத்தப்படுவதை மேலும் உறுதிப்படுத்துகிறது.
இவ்வாறான செயற்பாடுகள் சட்டத்தின் ஆட்சி, நம்பிக்கையுடனான நல்லிணக்கத்துக்குத் தேவையான முயற்சிகள், இனங்களுக்கிடையேயான நம்பிக்கைப் பிணைப்புகள் மற்றும் சமாதானம் அச்சுறுத்துகின்றன என்றும் கனடியத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.



