மத சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான தனது ஆதரவை பிரித்தானியா மீண்டும் வலியுறுத்தல்

இலங்கையில் உள்ள அனைத்து மத சமூகங்களின், மத சுதந்திரம் மற்றும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தனது தொடர்ச்சியான ஆதரவை பிரித்தானியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
பிரித்தானிய பாராளுமன்ற பிரதி செயலாளர் சீமா மல்ஹோத்ரா (seema malhotra) பிரித்தானிய பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மத சுதந்திரம் தொடர்பில், அனைத்து இலங்கையர்களும் தங்கள் நம்பிக்கையைப் பாகுபாடின்றி கடைப்பிடிப்பதற்கான உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து பிரித்தானியா தொடர்ந்து கவலைகளை எழுப்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம், அரசாங்க அதிகாரிகள், மதத்தலைவர்கள், சிறுபான்மை சமூகங்கள் மற்றும் சிவில் சமூகக்குழுக்களுடன் தொடர்ந்து செயற்பட்டு வருவதுடன், மதங்களுக்கு இடையேயான கலந்துரையாடல்களை ஊக்குவிப்பதிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தோ-பசுபிக் பகுதிக்கான முன்னாள் பிரித்தானிய அமைச்சர், கடந்த ஜனவரி மாதம், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட போது, மதத்தலைவர்கள் உள்ளிட்டவர்களை சந்தித்ததுடன், மதச் சுதந்திரத்தின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பற்கு, பிரித்தானியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் எடுத்துரைத்தார்.

இதேவேளை அண்மையில், இந்தோ-பசுபிக் பகுதிக்கான தற்போதைய அமைச்சர், கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கையின் சபாநாயகர், நீதி அமைச்சர் மற்றும் ஏனைய மூத்த அதிகாரிகளைச் சந்தித்தார்.
அதன்போது மனித உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான முக்கியத்துவம் தொடர்பில் விவாதங்களை நடத்தினார் என்றும் மல்ஹோத்ரா கூறியுள்ளார்.

இந்தநிலையில், சமத்துவம், மத சகவாழ்வு மற்றும் நீண்டகால நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகளை ஆதரிப்பதில் பிரித்தானியா தொடர்ந்தும் உறுதியாக இருப்பதாகவும் பிரித்தானிய பாராளுமன்ற பிரதி செயலாளர் சீமா மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.