“மாவீரச் செல்வங்கள்
மண்கிழித்து வெளிவந்து
சாவீரச்செய்தி சாற்றி
உறவுரைத்துப் பேசும் நாள்”
கவிஞர் புதுவை இரத்தினதுரை.
இந்த ஆண்டும் நவம்பர் 27ஆம் நாள் தாயகத்திலும் புலம்பெயர் தமிழுலகிலும் மாவீரர் நாள் சுடரேந்தும் போது தமிழ்நாட்டிலும் ஏதோ ஒரு வகையில் அந்நிகழ்வு நடந்து விடும். ஈழத் தோழமை இயக்கங்கள், அமைப்புகள் அந்தக் ’கடமையை’ மறவாமல் செய்து விடும். ஆனால்- 2009 முள்ளிவாய்க்கால் இனவழிப் புக்கு முன்னும் அடுத்த சில ஆண்டுகளி லும் கண்ட அந்த உணர்வும் ஊக்கமும் குன்றிக்கொண்டே போவதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். தமிழக மக்கள் எடுக்கும் எழுச்சியான நிகழ்ச்சியாக இல்லாமல் சில கட்சிகளின் கடன் கழித்தலாகவே இந்த எழுச்சி வற்றிப் போய்க் கொண்டிருக்கிறது.
ஏன்? எப்படி? உலகில் தமிழர்களின் முதற் பெரும் தாயகம் ஏன், எப்படி இவ்வாறு தாழ்ந்து போனது? தமிழ்நாட்டு மக்கள் தமிழீழ விடுதலையை உணர்ச்சி பொங்க ஆதரித்த காலம் மலையேறி விட்டதா? இந்தச் சுணக்கம் அல்லது சரிவுக்கு யார் பொறுப்பு? இனியும் தமிழ்நாட்டைத் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பின்-தளமாகக் கருத முடியாதா?
1980களில் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தமிழீழ விடுதலையைப் போட்டிபோட்டுக் கொண்டு ஆதரித்ததை மறக்க முடியாது. டெசோ மாநாடு நடத்தப்பட்டது. ஈழத்துப் படு கொலைகளைக் கண்டித்துத் தலைவர்கள் கறுப்புச் சட்டை அணிந்தார்கள். சிலர் பதவி துறக்கவும் செய்தனர். ஈழ விடுதலைக்கு இந்திய அரசு உதவக் கோரி மறியல் போர்கள் நடபெற்றன. ஈழப் போராளிகளுக்கு ஆயுதம் கொடுக்கச் சிலர் கோரினர். இந்தியப் படையை அனுப்பி வையுங்கள் என்றனர் வேறு சிலர். மெய்யாகவே இந்தியப் படை அனுப்பப்பட்ட போது எதிர்க்க வேண்டியதாயிற்று.
1983 யூலைப் படுகொலை தமிழ்நாட்டில் பேரதிர்வுகளைத் தோற்றுவித்தது. வெலிக்கடை சிறைக் கொலைகளை எதிர்த்துத் தமிழ்நாட்டுச் சிறைகளில் போராட்டம் வெடித்தது (நான் அப் போது சிறையிலிருந்தேன்). 1965இல் ’இந்தி அரக்கிக்கு’ எதிராகப் போராடிய தமிழ்மக் கள் இப்போது ’சிங்கள அரக்கனுக்கு’ எதிராகப் போராடினார்கள். 1967க்குப் பின் மங்கிய இனவு ணர்வு இப்போது மீண்டும் பொங்கியெழுந்தது.
1983க்குப் பின் ஈழத்தில் கருவிப் போராட் டம் வளர வளர விடுதலைப் புலிகளின் கை ஓங்கிற்று. தமிழ்நாட்டில் வீடுதோறும் தம்பி (பிரபாகரன்) நேசத்துடன் உச்சரிக்கப்படும் பெயராயிற்று. தளபதிகள் (அன்பு அம்மான்கள்) வாஞ்சையுடன் போற்றப்பட்டார்கள். ஊர் தோறும் ஈழத்து சோகமும் வீரமும் கண்காட்சிகளாயின. ஈழ மக்களின் துயரத்தை உணர்த்த ’இரத்தக்கட்டு’ ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. தோழமைக் கழகங் கள் நிறுவப்பட்டுப் பரப்புரை செய்யப்பட்டது.
ஈழம் விரைவில் மெய்ப்படும் என்ற நம்பிக்கை துளிர்த்தது. ஈழக் குடியரசு மலரும் நாளில் யாருக்கு முதல் மரியாதை, யாருக்கு இரண்டாம் மரியாதை என்ற சுவையான விவா தங்கள் கூட நடைபெற்றன.
”விடுதலை அரசியலின் நீட்சிதான் விடுதலைப் போர்!” என்ற புரிதல் குறைந்து போருக்காகவே போர் என்ற ஆர்வத் துடிப்பு வளர்ந்தது. விடுதலை அரசியலின் உள்நாட்டு, வெளிநாட்டுப் பரிமாணங்களும் அவற்றில் ஏற்பட்ட திருப்பங்களும் உரியவாறு கணக்கில் கொள்ளப்படவில்லை.
விடுதலை அரசியல் என்பது முதலாவதாக விடுதலையை உயிர்த் தேவையாகக் கொண்ட மக்களை மென்மேலும் விரிவாகவும் உறுதி யாகவும் அணிதிரட்டுவதைக் குறிக்கும். இரண்டா வதாக நட்பு ஆற்றல்களை ஆதரவாகச் சேர்த்துக் கொள்வதைக் குறிக்கும். மூன்றாவதாக படுமோச மான பகையை அறவே தனிமைப்படுத்தி அழிப் பதைக் குறிக்கும். நான்காவதாக பகையைப் பிளவு படுத்தி ஒரு பகுதியை முடக்குவதை – செயலிழக்கச் செய்வதை – குறிக்கும்.
வியத்நாம் விடுதலைப் போர் வரலாறு இவ்வாறான விடுதலை அரசியலுக்கு ஒரு பாடப்புத்தகம் போன்றது. சீனத்தில் உள்நாட்டுப் போர், சீன வன்பறிப்புக்கு எதிரான போர், இறுதியான விடுதலைப் போர் என்று ஒவ்வொரு கட்டமாக மாறி வந்த பாதையில் மாவோவும் சீனப் பொதுமைக் கட்சியும் சீன மக்களை வழிநடத்திய முறை சிறந்த வரலாற்றுப் பாடங்களைக் கொண்டு மிளிர்கிறது.
வெற்றி பெற்ற போராட்டங்கள் போலவே தோல்வியுற்ற போராட்டங்களும் வளமான படிப் பினைகளைத் தாங்கி நிற்கவே செய்கின்றன. அரசியலுக்கும் ஆய்தத்துக்குமான இயங்கி யல் உறவை மாவோ ”அரசியல் ஆணையிட வேண்டும்” என்று சுருக்கமாக வரையறுத்தார். ஆய்தம் அரசியலுக்கு ஆணையிடும் நிலை ஏற்படக் கூடாது. அரசியல் வெற்றிகளுக்காகப் போரியல் தோல்விகளை ஏற்க வேண்டி வரலாம். ஆனால் போரியல் வெற்றிகளுக்காக அரசியல் தோல்வி களை ஏற்கும் நிலை வரலாகாது.
ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் அரசியல் ஆய்தத்துக்கு ஆணையிட்ட அழகான தருணங்கள் உண்டு. வட்டுக்கோட்டையும் திம்பு வும் சுதுமலைத் திடலும் இதற்குச் சான்றுகள். இவை தமிழீழ வரலாற்றில் வெற்றிச் சின்னங்கள். யாழ் கோட்டைக்கும் அளம்பில் காட்டுக்கும் ஆனையிறவுக்கும் முல்லைத் தீவுக்கும் கிளிநொச் சிக்கும் கட்டுநாயகாவுக்கும் நிகரான வெற்றிச் சின்னங்கள். முன்னவை இன்றேல் பின்னவை இல்லை.
மொத்தத்தில் தமிழ்நாட்டின் தமிழீழ ஆதரவு இயக்கம் போரியல் வெற்றிகளைக் கொண்டாடியது போல் அரசியல் வெற்றிகளைக் கொண்டாடத் தவறி விட்டது. போரியல் தோல்விகள் வந்த போது அவற்றுக்கான அரசியல் காரணங்களைத் தேடிக் கண்டறியாததால் சோர் வுக்குள் வீழ்ந்தோம்.
விளையாட்டுப் போட்டிகளை பார்த்துச் சுவைக்கிற சுவைஞர்களாகவே நம் மக்களை மாற்றி வைத்திருந்தோம். ஒரு விடுதலைப் போராட்டத்தை விடுதலைப் போராட்டமாகப் புரிந்து கொண்டு ஆதரிக்க விடாமல் வீரநாயக வழிபாடு தடையிட்டது என்பதும் உண்மை தான். வரலாற்றிலிருந்தும் வரலாற்று நாயகர்களிட மிருந்தும் கற்றுக் கொள்வதை விடவும் பக்தி மயக்கத்தில் ஊறிக் கிடப்பதே ஊக்கி வளர்க்கப் பட்டது.
ஈழ விடுதலைப் போராட்டம் இன்று இனவழிப்புக்கு நீதி கோரும் போராட்டமாக உருவெடுத்துள்ளது. புவிசார் அரசியல் உள்ளிட்ட அரசியல் பார்வை இல்லாமல் இந்தப் போராட் டத்தை விளங்கிக் கொள்ளவே முடியாது. புதிய சூழல்களைப் புரிந்து கொள்வதிலான இடைவெளியை நம்பமுடியாத புனைகதைகளைக் கொண்டு நிரப்பும் முயற்சி தோல்வி காணாமலி ருக்க முடியாது.
மக்களிடம் அறிவார்ந்த அரசியலைப் புகட்டுவதற்கு எளிய மாற்று எதுவுமில்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றுத் தேவையைத் தெளிவாகவும் தீர்க்கமாகவும் உணர்த் திக் கொண்டே, உடனடிக் கோரிக்கைகளுக் கான போராட்டத் தில் எல்லாக் களங்களிலும் எல்லா வகையிலும் நம் ஆற்றல்களைத் திரட்டி நிறுத்த வேண்டும். வெற்றிகளிலிருந்து ஊக்கம் பெறவும் தோல்விகளிருந்து பாடம் பெறவும் போற்றுதலுக் குரிய நம் மாவீரர்கள் வழிகாட்டுவார்கள்.
தலைவர்கள் மக்களை வழிநடத்துவதற்கு மாறாக மக்களால் வழிநடத்தப்படுவதுதான் தமிழ் நாட்டில் தமிழீழ ஆதரவுப் போராட்டத்தின் நெடுங்கால மரபு. தலைவர்களுக்காகக் காத்திருந்து காலத்தை வீணாக்க வேண்டாம். மக்களை அணியமாக்குவோம். போட்டிபோட்டுக் கொண்டு தலைவர்கள் வருவார்கள்.


