யாழ்ப்பாணம் – காரைத்தீவு பகுதியில் உள்ள கடற்படை முகாமை அகற்ற வேண்டாம் என்று அப்பகுதியில் வாழும் தமிழ் மக்கள் தம்மிடம் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தியுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
147 பேர் கைச்சாத்திட்டு கையளித்த அதற்கான கடிதத்தை தாம் சபைக்குச் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் இராணுவத்தினர், காவல்துறை ஈடுபடுவதாகப் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இது முற்றிலும் தவறானது என்றும் போதைப்பொருள் ஒழிப்புக்கான முப்படையினர் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்கள் என்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெருந்தொகையான இராணுவத்தினர் இருப்பதாகவும், ஒரு சிவில் பிரஜைக்கு இரண்டு படையினர் இருப்பதாகவும் தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிடுகிறார்கள்.
இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றார்கள். ஆனால், யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் உள்ள கடற்படை முகாமை அகற்ற வேண்டாம் என்று அப்பகுதியில் வாழும் தமிழ் மக்கள் தம்மிடம் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தியுள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் வியாபாரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று காரைநகர் பகுதி தமிழ் மக்கள் குறிப்பிடுகிறார்கள். பொதுமக்களின் அபிலாசைகளை அடிப்படையாகக் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம். தேசியப் பாதுகாப்புடன் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு வடக்கு , கிழக்கு மாகாணங்களில் காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படுகின்றன என்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
காணி விடுவிப்புக்குத் தடையாக உள்ள காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.


