ஈழத்தமிழர்களின் பூர்வீக இடங்களிலெல்லாம் பேரினவாத அரசுகளால் அடாவடித்தன செயற்பாடுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன. அநுர அரசாங்கமும் இதற்கு விதிவிலக்கில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது- வென்றவன் பக்கமே வரலாறு சாயும் என்பதையும், வெல்பவன் சொல்வதே வரலாறாகும் என்பதையும் இனவாதம் பழுத்துப்போயுள்ள இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் வெளிப்படுத்துகின்றன.
முல்லைத்தீவில் குருந்தூர் மலை, நெடுங்கேணியில் வெடுக்குநாறிமலை, யாழ்ப்பாணத்தில் தையிட்டி, தற்போது திருகோணமலையில் சிறி சம்புத்த ஜயந்திபோதிவர்த்தன விகாரை, ஈழத்தமிழர்களின் பூர்வீக இடமெல்லாம் சட்டம் மௌனிக்க, அரச இயந்திரங்கள் காவல்காக்க, தமிழர்களை அடித்தும் அச்சுறுத்தியும் தடுத்தும் அறத்தைக் கொன்று விகாரைகள் எழுப்புகின்றன. வடக்கு, கிழக்கில் இடம்பெறும் இத்தகைய நீதிக்குப் புறமமான பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளை நாங்கள் எந்தத் தயக்கமும் இல்லாமல் எதிர்க்கின்றோம்- என்றார்.



