திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: சட்டப்படி நடவடிக்கை தேவை – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை இனவாதமாக்க இடமளிக்காது சட்டத்தை முறையாக செயற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதி அமைச்சுக்கே இதன் பொறுப்பு உள்ளது. கடந்த கால இனவாத நடவடிக்கைகளை கட்டுப்படத்த வேண்டும். இனவாத நடவடிக்கை மீண்டும் செயற்படுவது போன்றே தெரிகிறது என  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற   2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள்,வெளிநாட்டு , வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, நீதி  மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும்  உரையாற்றியதாவது,

இனவாதத்தை  நாட்டில் இருந்து ஒழிப்பதாகவே கூறிக்கொண்டே  இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. கடந்த கால அரசாங்கங்களின் இனவாத கொள்கைக்கு எதிராக முறைமை மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக குறிப்பிட்டனர்.

இந்நிலையில் திருகோணமலையில் நடந்துள்ள சம்பவங்கள் தொடர்பில் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அதற்கு முன்னர் திருகோணமலையில் சனத்தொகை தொடர்பில் கூறும் போது,1871 காலப்பகுதியில் நடத்தப்பட்ட முதலாவது சனத்தொகை கணக்கெடுப்பின் போது,தமிழர் 74.52 வீதமாகவும், முஸ்லிம்கள் 24.72 வீதமாகவும், சிங்களவர்கள் 0.53 வீதமாகவும் இருந்தது.

அத்துடன் சுதந்திரத்திற்கு முன்னர் 1946இல் நடத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பின் போது தமிழர் 48.74 வீதமாகவும்,முஸ்லிம்கள் 39.6 வீதமாகவும், சிங்களவர்கள் 9.87 வீதமாகவும் இருந்தது. ஆனால் தற்போதைய கணக்கெடுப்பின்படி அங்கே சிங்களவர்களின் எண்ணிக்கை 26.97 வீதமாக இருக்கின்றது.

புள்ளிவிபரங்களை பார்க்கும் போது இன்று தமிழ் மக்கள் சனத்தொகை அங்கே வீழ்ச்சியடைந்துள்ளது. அரசாங்க அனுசரணையுடன் வேண்டுமென்றே சனத்தொகை குறைப்பு நடந்துள்ளது. தமிழ் மக்கள் தமது சொந்த இடங்களிலேயே சிறுபான்மையினத்தவர்களாக இருக்கின்றனர். அனைத்து நடவடிக்கைகளும் வேண்டுமென்றே நடத்தப்படுகின்றது. அந்த மக்களுக்கு சொந்த இடங்களிலேயே பாதுகாப்பு இன்றி அங்கிருந்து வெளியேறும் நிலைமை உருவாகியுள்ளது. அங்கே வேறு இனத்தவர்களை குடியேற்ற முயற்சிக்கப்படுகின்றது. இதற்காகவே விகாரைகள் அமைக்கப்படுகின்றது. அரச அனுசரணையில் முறைமைத்துவத்துடனேயே அவை நடக்கின்றன.

திருகோணமலையில் சர்ச்சைக்குரிய விகாரை 2004 சுனாமி  அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்டது. அங்கே சிறிய கட்டிடமே முன்னர் இருந்தது. அதுவே சுனாமியில் பாதிக்கப்பட்டது. பின்னர் அது சங்கமித்த விகாரைக்கு மாற்றப்பட்டது. அப்போதிருந்த அரசாங்கத்தினால் மாற்று காணி ஒதுக்கப்பட்டது. 2014இல் இந்த விகாரைக்காக மீண்டும் காணி ஒதுக்கப்பட்டது. பின்னர் அனைத்தும் சுமுகமாக காணப்பட்டது.

இந்நிலையில் கடந்த வாரத்தில் அங்கு கட்டிடங்கள் அமைக்கும் பணிகள் நடந்த நிலையில், அது நீதிமன்றத்திற்கு சென்ற போது ஒருவார கால அவகாசம் கோரப்பட்டிருந்தது. இவ்வாறான நிலைமையிலேயே அங்கு குறிப்பிட்ட சம்பவம் நடந்துள்ளது. இது இப்போது இனவாதமாக மாற்றப்பட்டுள்ளது.

அரசாங்கம் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். இனாவதத்தை இல்லாது செய்ய வேண்டும். அதற்காகவே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் வேறு விதமாக செயற்படுகின்றனர். நீதி அமைச்சுக்கே இதன் பொறுப்பு உள்ளது. கடந்த கால இனவாத நடவடிக்கைகளை கட்டுப்படத்த வேண்டும். ஆனால் அந்த நடவடிக்கை மீண்டும் நடப்பது போன்றே தெரிகின்றது. நீதி அமைச்சர் நீதியை நிலைநாட்ட அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.

இனவாத மனப்பாங்கை தோற்கடித்து மக்கள் விரும்புவது போன்று நீங்கள் செயற்பட வேண்டும். சிங்கள மக்களும் குறிப்பிட்ட சம்பவத்தை எதிர்க்கின்றனர். அங்கே பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்காக குண்டர்கள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.திருகோணமலையில் இருந்து மக்கள் இந்த அரசாங்க்திற்காக வாக்களித்துள்ளனர். மக்களுக்கு சரியானவற்றை நீங்கள் செய்ய வேண்டும். அந்த மக்களுக்கு அநீதி இழைக்கப்பட இடமளிக்கக்கூடாது என்றார்.