இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஒப்பந்தம் குறித்து உதய கம்மன்பில எச்சரிக்கை

வரலாற்றை மீட்டுப்பார்க்கும் போது இராணுவ பூமியில் நாட்டை பாதுகாத்த ஆட்சியாளர்கள் ஒப்பந்தங்களில் நாட்டை கோட்டை விட்டுள்ளனர் என்று முன்னாள் அமைச்சரும் பிவித்துருஹெல உறுமய கட்சியி்ன் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இலங்கை பாதுகாப்பு பிரிவு மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு பிரிவுக்கு இடையே கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எண்ணி அமெரிக்க தூதுவர் மகிழ்ச்சியில் உள்ளார். எனினும் இலங்கையை எண்ணி அஞ்ச வேண்டியுள்ளதாகவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இராஜதந்திர தொடர்புகளுக்கமைய அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், இலங்கை பாதுகாப்பு பிரிவு, அமெரிக்காவின் பாதுகாப்பு பிரிவினருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பில் கருத்துரைத்த அமெரிக்க தூதுவர், இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான தொடர்பின் புதிய அத்தியாயம் இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையை எப்போதும் குறை கூறும் அமெரிக்க தூதுவர் தற்போது மகிழ்ச்சியில் உள்ளார், என்பதை அறிந்ததும் இலங்கை நாடு அஞ்சமடைய வேண்டியுள்ளது. இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட 7 ஒப்பந்தங்களைப் போலவே தற்போது அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் தொடர்பிலும் எவ்வித தகவல்களும் வெளிப்படுத்தப்படவில்லை என்றும் முன்னாள் அமைச்சரும் பிவித்துருஹெல உறுமய கட்சியி்ன் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அதில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் தொடர்பிலும் தகவல் தெரியாது. தகவல்களை வெளிப்படுத்தாமையால் அச்சம் கொள்ள வேண்டியுள்ளது. ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடுவதற்கு முன்னர் அவதானத்துடன் செயற்படுவது மிக அவசியம் என்று முன்னாள் அமைச்சரும் பிவித்துருஹெல உறுமய கட்சியி்ன் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.