
திருகோணமலை சம்புத்த ஜயந்தி விஹாரையில் இருந்து நேற்றிரவு (16) அகற்றப்பட்ட புத்தர் சிலையை மீண்டும் அங்கு நிறுவுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான பாதீடு மீதான குழு நிலை விவாதத்துக்கான இன்றைய (17) சபை அமர்வின் போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவினால் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது,
முன்னதாக, திருகோணமலையில் சம்புத்த ஜயந்தி விஹாரையில் நேற்றிரவு புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டதை அடுத்து அங்கு பதற்ற சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.
அவசர அவசரமாக அந்தப் பகுதியில் புத்தர் சிலை நிறுவியமையினாலேயே இந்த பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது. இந்தநிலையில், நேற்றிரவு நிறுவப்பட்ட குறித்த புத்தர் சிலைக்கு பாதிப்புகள் ஏற்படவுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அந்த சிலை நேற்றிரவே அகற்றப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதற்கமைய அந்தப் பகுதியில் நேற்றிரவு முதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.
இதனையடுத்து குறித்த புத்தர் சிலையை மீண்டும் அந்த விஹாரையில் நிறுவுமாறு, பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று (17) முதல் அந்த விஹாரைக்கு தேவையான பாதுகாப்புகள் முறையாக வழங்கப்படும் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அமைச்சர் ஆனந்த விஜயபாலவும் மற்றும் அரசும் பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு கோழைத்தனமாக அடிபணிவதை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கேவலமாகக் காண்கிறது என்று சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசும் முன்னைய அரசுகளைப் போலவே ஒரு இனவாத, சிங்கள பெளத்த பேரினவாத அரசு என்பதை நிறுவியுள்ளது.
இந்த கட்சியைச் சேர்ந்த அனைத்து தமிழ் உறுப்பினர்களும், திருகோணமலை உறுப்பினர் அருண் ஹேமச்சந்திரா உட்பட உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.



