பயங்கரவாத தடை சட்டத்துக்கு மாற்றீடாக கொண்டுவரப்படவுள்ள, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக விரைவில் மக்கள் கருத்து கோரப்படவுள்ளது.
நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவினால் இந்த விடயம் இன்று (17) பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் சுற்றுலாத்துறை மற்றும் வெளிவிவகார அமைச்சுக்கான ஒதுக்கீட்டின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் புதிய சட்டங்கள் மற்றும் சட்டங்களைத் திருத்துவது குறித்து விசேட நிபுணர்களின் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, தற்போது 14 விசேட நிபுணர்களின் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தல், சட்டத்தை உருவாக்குதல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்காக இந்த விசேட நிபுணர் குழுக்கள் செயற்படுகின்றன.
அதற்கமைய, பயங்கரவாத தடைச் சட்டத்தைத் திருத்தம் செய்து புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூல வரைபு விசேட நிபுணர் குழுவினால் தன்னிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அது தற்போது தமிழ் மற்றும் சிங்கள மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்படுவதாகவும் அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.
அதற்கமைய, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து வெகு விரைவில் மக்கள் கருத்து கோரப்படவுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.



