இலங்கையில் இனவாத,மதவாத பிசாசுகள் உள்ளன – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கருத்து

இலங்கையில் இனவாத,மதவாத பிசாசுகள் உள்ளன.  மக்கள் மத்தியில் இனவாத மற்றும் மதவாத பிரச்சினைகளை கொண்டுவர முயற்சிப்பவர்களுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தாமரை கோபுரத்தில் இன்று திங்கட்கிழமை (17) நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

திருகோணமலையில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட புத்தர் சிலை குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் தெரிவிக்கையில்,

திருகோணமலை கடற்கரை பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட பெளத்த வணக்கஸ்தலத்தில் வைக்கப்பட்ட புத்தர் சிலை நீண்ட நேர போராட்டத்தின் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இரவு அங்கிருந்து அகற்றப்பட்டது.

நாட்டில் சில இனவாத,மதவாத பிசாசுகள் உள்ளன. அவர்கள் தான் இதனை செய்கின்றனர்.

மக்கள் மத்தியில் இனவாத மற்றும் மதவாத பிரச்சினைகளை கொண்டுவர முயற்சிப்பவர்களுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் தெரிவித்துள்ளார்.