இங்கிலாந்தில் இருந்து ரணிலுக்கு அனுப்பப்பட்ட அழைப்பு கடிதம் குறித்து ஆராய்வு

வோல்வர்ஹம்டன் (Wolverhampton) பல்கலைக்கழகத்தால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் அழைப்புக் கடிதத்தின் நம்பகத்தன்மையை ஆராய ஐந்து பேர் கொண்ட குற்றப் புலனாய்வு குழு இங்கிலாந்துக்குச் சென்றுள்ளது.

இந்த தகவலை ஆங்கில செய்தித் தாள் ஒன்று வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள முன்னாள் இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேனவிடம் இந்த குழு நாளைய தினம் (17) வாக்குமூலத்தை பதிவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023, செப்டம்பரில், அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்ரமசிங்க, வோல்வர்ஹம்டன் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள இங்கிலாந்துக்கு சென்ற போது, சரோஜா சிறிசேனவே இங்கிலாந்துக்கான உயர்ஸ்தானிகராக செயற்பட்டார்.

இதன்படி, இங்கிலாந்தில் தற்போது வசிக்கும் சிறிசேன, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் வாக்குமூலம் அளிக்க முன்னிலையாகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க குறித்த இரண்டு நாள் பயணத்தின் போது 16.6 மில்லியன் ரூபாய் பொது நிதியை செலவு செய்தமை, ஒரு தனிப்பட்ட பயணத்துக்கானது என்று குற்றப்புலனாய்வு துறையினர் கூறுகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ரணில் விக்ரமசிங்க, இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.