போதையும் அரசியல் பாதையும் : தாமோதரம் பிரதீவன் 

அண்மைய நாட்களாக புதிய அரசாங்கத்தின் வருகைக்குப் பின்னர் தொடர்ந்தும் இலங்கைத் தீவு முழுவதும் கைப்பற்றப்பட்டு வருகின்ற போதைப் பொருட்களும் அவை பற்றிய செய்திகளும் சொல்லும் சேதி என்ன என்ற பல கோணக் கேள்விகளோடு பக்குவமாய்ப் பார்க்கப் பல விடயங்கள் இருக்கிறது எனக்கூறி தொடருவோம்.
ஐஸ்,குஷ்,ஹர்ஷிஸ்,ஹெரோயின் என பல்வேறு பெயர்களிலும் அழைக்கப்பட்டு பல்வேறு இடங்களிலும் புதைக்கப்பட்டு, கடலி லும் நங்கூரம் இடப்பட்டு, கப்பல்களிலும், கண்டெய்னர்களிலும் (கொள்கலன்) பல நூறு கோடிகளுக்கும் அதிகமான  பெறுமதி கொண்ட பல்லாயிரம் கிலோ போதைப் பொருட்கள், பல்வேறு பெயர்களோடு நாட்டிற்குள் மீட்கப் பட்டுக் கொண்டிருக்கின்ற பேரவலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
நாட்டு மக்களையும் நாட்டு எதிர்கால சந்ததிகளையும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கும் கேடுகெட்ட பணி செம்மையாக நடந்திருக்கிறது, அரச இயந்திரமும் இதற்குத் துணை போயிருக்கிறது. அரசியல்வாதிகளும் இதற்குப் பின்புலமாய் இருந்து செயற்பட்டு இருக்கிற உண்மைகளும் வெளிப்பட்டிருக்கிறது. போதையை ஒழிப்போம் மேதையாய் வாழ்வோம் என மேடைப் பேச்சுக ளில் முழங்கிய புத்திஜீவிகளும் கூட இதற்கு விதிவிலக்கல்ல என கூறக்கூடிய அளவிற்கு போதை பொருள் வியாபாரிகளாக, போதைப் பொருள் பாவணையாளர்களாக மாறிய பேரவலம் இந்த நாட்டில் நடந்தேறியிருக்கிறது.
இன்று பல்வேறு இடங்களிலும் ஜாதி, மதம் ,மொழி, பிரதேச பேதமின்றி அரங்கேறிக் கொண்டிருக்கின்ற போதைப் பொருள் கலாச்சாரப் பேரவலத்தைக் காணக்கூடியதாக இருக்கிறது. அன்றொரு காலத்திலே போதைப் பொருள் எனும் சொல்லும், போதைப் பொருள் பாவிக்கின்ற நபர்கள் என்போர் பற்றியும் செய்திகளிலும் தூரத்து கதைகளிலும் கேள்வியுற்ற எம் வடக்கு கிழக்குத் தமிழர் தாயகமும் கூட இன்று போதை வியாபாரிகள் வியாபித்துப் போதை பொருட்கள் எம் தேசமெங்கும் விதைக்கப்பட்டு எம் எதிர்கால சந்ததி சிதைக்கப்பட்டு  சின்னாபின்னமாக்கப்பட்டிருக்கின்ற செய்திகள் நாளுக்கு நாள் வருகிற போது சிந்தை சற்று குழம்பித்தான் போகிறது.
அன்று 2009 ற்கு முன்னரான நாட்களில் வடக்குக் கிழக்குத் தமிழர் தேசத்தில் போதை என்ற சொல்லே இல்லாத நிலையை எண்ணிப் பார்த்து நாங்களும் பூரித்துப் போக சிங்கள தேசமும் இன்று அதை ஏற்றுக் கொள்கிறது. சிங்கள மக்களும், சிங்கள தேசத்தின் அமைச்சர்களும் கூட இன்று அதை உணர்ந்து வெளிப்படையாகவே பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அன்று அவர்களது காலத் தில் இந்த வடக்கு கிழக்கில் போதை,பாதாள உலகம், ரவுடிகள், கலாச்சார சீர்கேடுகள் என்பன அறவே கிடையாது என கூறுகிறார்கள்.
2009 ன் பின்னரான காலத்தில் தான் இவைகள் தமிழர் தேசத்தில் தலைவிரித்தாடுகின்றன என்றும் அவர்களே அந்த அறத்துக்கு சாட்சியம் கூறிக் கொண்டிருப்பது மகிழ்ச்சி தந்தாலும் கூட, எமது தேசத்துப் பிள்ளைகள் கலை, கலாசாரம் மறந்து சீர்கெட்டு, சின்னாபின்னமாகி, சிதறி கிடப்பது கண்டு மனம் நொந்து நொறுங்கிப் போகிறது.
கடந்த கால கொடுங்கோல் ஆட்சியாளர்கள் வடக்கு கிழக்குத் தமிழர்கள் தேசமெங்கும் எதிர்கால சந்ததி தமிழ் உணர்வற்றவர்களாக, கலை, கலாச்சாரம் மறந்தவர்களாக இன விடுதலைக்கும், தேச விடுதலைக்குமான குரல் நசுக்கப்பட்டவர்களாக அல்லது அதை மறந்து விட்டவர்களாக மாற்றப்பட எடுக்கப்பட்ட முயற்சி களின் ஆயுதங்களில் ஒன்றுதான் இந்தப் போதை. ஆனால், அந்த போதை இன்று அவர் கள் தேசத்தையும் சின்னாபின்னமாக்கி சுக்கு நூறாக்கியிருக்கிறது. அதுவும் எமக்குக் கவலைதான் ஏனென்றால் நாம் மனிதாபிமானம் கொண்ட தமிழர்கள். இருந்தாலும் தங்கள் சொந்த தேசத்து மக்களைக் கூட போதை கலாச்சாரத்திற்குள் அடி மைப்படுத்தி அவர்களையே அழிக்கின்ற பணியை செய்திருக்கின்ற கொடுங்கோலர்களுடைய முகத்தி ரைகள் கிழிக்கப்பட்டு வெளிப்படுத்தப் பட்டு கொண்டிருப்பதை நாளுக்கு நாள் செய்திகளில் படிக்கிறோம்.
இதனால் சிங்கள,தமிழ்,முஸ்லீம் மக்களுக் கான அரசியல் கதவுகளையும் திறந்து உள்ளீர்க்கும் நாசூக்கான பணியையும் செய்கிறது அரசு என்பதிலும் சற்று நிதானமான தெளிவுடன் நாம் நகர வேண்டியுள்ளது.
கடலுக்குள் இருந்தும், நிலத்துக்குள் இருந்தும் பல்லாயிரம் கிலோ கணக்கிலான போதைப் பொருட்கள் மீட்கப்படுவதும் அதன் பின்னணியில் அரசியல்வாதிகள், பெரும் செல்வந்தர்கள், மாபியாக்களாக செயல்பட்டிருப்ப தும் இதற்காக நடந்தேறிய, இன்றும் நடந்து கொண்டிருக்கின்ற கொலைகளும், அதன் பின் னணியில் இருக்கின்ற பாதாள உலகக் குழுக்களும் என பல்வேறு திடுக்கிடும்  செய்திகளைப் படிக்கிறோம்.
நாடு கடந்தும் நடக்கும் கைதுகளும், அவர்கள் அழைத்து வரப்படும் தமிழ்த் திரைப்படப் பாணியும் அரசுக்கான விளம்பரங்களாகிப் போனாலும்  நாமும், நமது பிள்ளைகளும், நமது தேசமும் மீட்சி பெறட்டும் எனும் எண்ணத்தை உண்டாக்கி எமது தமிழ்த் தேசிய  அரசியலில் நாமும், நமது எதிர்கால சந்ததியும் சறுக்கிவிடாமல் இருக்க வேண்டும் எனும் எண்ணத்தையும் விதைக்கிறது.
இதுவரை நாட்டிற்குள்ளும், விஷேடமாக வெளிநாடுகளில் கைது செய்து அழைத்து வரப்பட்டவர்களிடமும் இருந்து பெறப்படுகின்ற உண்மைகள் பல மர்ம முடிச்சுக்களை அவிழ்த்து கொண்டிருக்கிறது. அதிலே வடக்குக் கிழக்கு தமிழர் தாயகத்திலும் சிலர் சிக்கி, இந்த சதி வலையில் எம் மக்களையும் இழுத்துவிட்ட கதைகளையும் படிக்கிறோம். கொழும்பிலிருந்து வந்து போதைப் பொருளுடன் வடக்கில் கைது செய்யப்படுகிறார்கள். சந்தை பகுதியில் போதைப் பொருட்களோடு ரவுடி கும்பலின் அட்டகாசம் என்றெல்லாம் வரும் செய்திகள் படிக்கிறோம், போதைப் பொருள் கும்பலுக்கும், பாதாள உலகக் கும்பலுக்கும் உதவியவர்கள் வடக்கிலிருந்து கைது செய்யப்படுகிறார்கள். அவர்களுடைய வீடுகளிலும் போதைப் பொருட்களும், ஆயுதங்க ளும் மீட்கப்படுகிறது எனவும் செய்திகளில் தொடர்ந்து வருகிறது.
இவை எங்களுடைய மண்ணையும், மண்ணின் மகிமையையும்  மழுங்கடிக்கின்ற வகையிலாகத் திட்டமிட்டு நகர்த்தப்படுகிறதா?  அல்லது அரசியல் இருப்புக்காகச் செயல்படுத் தப்படுகிறதா? என்ற கேள்வியும் எழுந்தாலும் எமது தேசமும் போதையிலிருந்தும், சீர்கேடுகளி லிருந்தும் விடுதலை பெறட்டும் எனும் பிரார்த் தனைகளோடு நகர்கிறோம்.
அதேவேளை  அனுராதபுரத்தில் போதைப் பொருள் வியாபாரியான பாடசாலை அதிபர்  கைது செய்யப்படுகிறார். அவரது மகனும் கைது செய்யப்படுகிறார், அவரது மனைவி ஆளும் கட்சியினுடைய பேலியகொடை உள்ளூராட்சி மன்ற உறுப்பினராக இருக்கிறார். ஆனாலும் அரசு முன்னெடுக்கிற போதை ஒழிப்பிற்கு தன்னால் இடையூறு வரவேண்டாம் என அவர் இராஜினாமாவும் செய்கிறார்.
யாரைத்தான் நம்புவது என நாமும் திகைத்து நிற்க. தொடர்ந்து செல்லுகிறது இந்த போதை கலாச்சாரம். இது பெண்களையும் விட்டு வைக்கவில்லை கிழக்கின் திருகோணமலை, தோப்பூர் பிரதேசத்தில் 25 வயது நிரம்பிய முஸ்லிம் பெண் பிள்ளை போதைப் பொருளோடு கைது செய்யப்படுகிறார் ஆனால் அவர் வியாபாரியல்ல, அவரிடமிருந்து மீட்கப்பட்டது அவர் தனது பாவனைக்காக  வைத்திருந்த போதைப் பொருள். போதைக்கு தான் அடிமைப்பட்டு விட்டதாக கூறுகிறார் என்ன ஒரு அபத்தம் நிகழ்ந்து கொண்டி ருக்கிறது அனாச்சாரம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
ஏதோ ஒரு வகையில் இந்த அரசு தமிழர் தேச விவகாரங்களில் அதிக கரிசனை செலுத்தவில்லை என்றாலும் எதிர்கால ஒட்டுமொத்த சந்ததியின் இருப்பை கேள்விக்குறியாக்கும் போதை, பாதாள உலகம், ஊழல், மோசடி, அதிகார துஷ்பிரயோகம், நீதி மறுப்பு போன்ற விடயங்களுக்காய் செயல் படுவது  வரவேற்கத்தக்கது,
ஆனாலும், தமிழர்களுக்கு இழைக்கப் படுகின்ற அநீதிகள், தமிழர்களுக்கு மறுக்கப்படுகி ன்ற நீதிகள் தொடர்பிலும் இந்த அரசு கரிசனை காட்ட வேண்டும்.
போதை ஒழிப்புப் போர்வையில் எதிர்கால அரசியல் ஸ்திரத்திற்காக மாத்திரம் செயற்படாமல் திறந்த மனதுடன் தமிழர் தேச விடுதலைக் கனவுகளையும் இந்த அரசு கண்டுகொள்ள வேண்டும். அதுவரை தமிழர் தேசத்து சொந்தங்கள் சற்று நிதானமாக, பொறுமையாக நடப்பவற்றை அவதானித்துத் தமிழர்களாகத் தமிழர் மரபுரிமை,கலை,கலாசாரம்,பண்பாடுகளைக் கட்டிக் காத்து ஒற்றுமையுடன் போதையை ஒழித்து மேதைகளாகவும், கல்வி, பொருளாதாரத்திலும், தமிழர் தேசிய அரசியலின் ஸ்த்திரத்திற்காகவும்,தமிழர் இருப்பிற்காகவும், தமிழர்களாக வாழ்வோமாக. (அடுத்த கட்டுரையில் புள்ளி விபரங்கள்,பெயர் விபரங்களுடன் பல உண்மைகளை எதிர்பாருங்கள்)