இலங்கையில் பொறுப்பு கூறல் கானல் நீராக காணப்படுகின்ற நிலையில் சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகம் சர்வதேசத்திற்கு காட்டும் கண்துடைப்பு அலுவலகம் என மூத்த சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற சட்டத்துக்கும் மனித உரிமைக்குமான கற்கை நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அரசியல் தீர்வும் பொறப்புக் கூறலும் ஒரு எண்ணிம ஆவண காப்பக அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு தொடக்க உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகம் என்னைப் பொறுத்தவரையில் ஒரு கண் துடைப்பு அலுவலகம் சர்வதேசத்தை திருப்திப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டது. உலகில் பல்வேறு நாடுகளில் காணப்படும் சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகம் ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை தீர்க்கும் அலுவலகங்களாக செயல்படுகின்றன.
ஆஜென்டினா, குவாட்டலாமா கொசுவா ,இங்கிலாந்து ,பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் இந்த அலுவலகங்கள் செயப்படுகின்றன. மேலும், இலங்கையில் பாதிக்கப்பட்ட தரப்புகள் எதிர்பார்க்கின்ற பொறுப்பு கூறல் விவகாரம் பின்னோக்கி பகிர்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் , பொலிஸ் திணைக்களம் மற்றும் மற்றும் அரச உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பு இன்மையே காரணம்.
சட்டமா அதிபர் திணைக்களம் வழக்குகளை உரிய காலப் பகுதியில் முடிவுறுத் தவறுமானால் அதே சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருக்கும் சட்டத்தரணிகள் இரண்டு மூன்று வருடங்களில் நீதிபதியாக பதவி உயர்வு பெற்று சென்று விடுவார்கள் வழக்குகள் வருடக்கணக்கில் இழுத்தடிப்புச் செய்யப்படும்.
ஆகவே இலங்கையில் பொறுப்பு கூறல் மற்றும் சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகம் சர்வதேசத்திற்கு காட்டும் கண் துடைப்பு என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிவஞானம் சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.



