தமிழ் நாட்டுக்கு படகில் சென்றவர் கைது

சட்ட விரோதமான முறையில் மன்னாரில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியைச் சென்றடைந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று வியாழக்கிழமை (13) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் இன்று காலை மரைன்  காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது கடற்கரையில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றுகொண்டிருந்த நபரை  பிடித்து விசாரித்துள்ளனர்.

அப்போது அவர், சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கையிலிருந்து தனுஷ்கோடி சென்று இறங்கியமை தெரியவந்துள்ளது.

அதனையடுத்து அவரை கைது செய்த மரைன் காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மன்னார்  வங்காலை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, சட்ட விரோதமான முறையில்  கடல் வழியாக தமிழகத்துக்குள் சென்றதற்கான காரணம் குறித்து மரைன் காவல்துறையினர் மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.