நிதி ஒதுக்கினால் மட்டும் போதாது, தேர்தலை நடத்துங்கள் – இளையதம்பி ஸ்ரீநாத் எம்.பி. வலியுறுத்தல்

மாகாண சபை தேர்தலுக்கான நிதியை மாத்திரம் ஒதுக்கியுள்ளதாக குறிப்பிடாது மட்டுப்படுத்தப்பட்ட தீர்வாக இருக்கின்ற சகல அதிகாரங்களையும் கொண்ட மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடத்தில் நடத்துவதற்கான முன்னெடுப்புகளை அரசாங்கம் செய்யவேண்டும் என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி ஸ்ரீநாத் வலியுறுத்தினார்.

வடக்கு மற்றும் கிழக்கில் அதிகளவான மக்கள் தமிழ்த் தேசியத்திற்காகவே வாக்களித்துள்ளனர் என்றும் இளையதம்பி ஸ்ரீநாத்  குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம்  நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

2026ஆம் ஆண்டுக்கான  வரவு – செலவுத் திட்டத்தில் காணப்படும் பல நல்ல விடயங்களை நாங்கள் வரவேற்கின்றோம். மிக முக்கியமாக  நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக வரவு செலவில் துண்டுவிழும் தொகையை குறைப்பதற்கும், கையிருப்பை அதிகரிப்பதற்கும் அரசாங்கம் வேலைத்திட்டங்களை முன்வைத்துள்ளது. அத்துடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத் திட்டம், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட வேலைத்திட்டங்களை நாங்கள் பாராட்டுகின்றோம். அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாலங்கள் உள்ளிட்ட சில விடயங்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் நன்றி கூறுகின்றோம்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரச்சினைகள் உள்ளன. அதாவது மட்டக்களப்பு   படுவான்கரை, எழுவான்கரை போன்ற பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டிய பொறுப்புகள் இந்த அரசாங்கத்திற்கு உள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் கடல்வளத்தை அதிகளவில் கொண்டுள்ளது. அங்கு கதிரவெளியில் இருந்து பெரிய கல்லாறு வரையில் பல மீன்பிடி துறைமுகங்களை அமைக்க வேண்டிய தேவைகள் உள்ளன. கடந்த காலங்களில் இது தொடர்பான முன்யோசனைகளை முன்வைத்துள்ளோம். இதன்படி வருகின்ற வரவு செலவுத் திட்டத்தில் அந்த பிரதேசத்தில் அபிவிருத்திகளை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடைகள் அதிகளவில் உள்ளன. அவற்றை பாதுகாப்பதற்காக மேய்ச்சல் தரை தொடர்பான பிரச்சினை பாரியளவில் இருக்கின்றது. மயிலத்தமடு மாதவனை பிரச்சினையால் 750 நாட்கள் தாண்டியும் அங்குள்ள மக்கள் வீதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மிக பெரும்பான்மையான பலத்துடன் இருக்கின்ற இந்த அரசாங்கம் ஏன் இந்த விடயத்தை முன்னுரிமை வழங்கி கவனிக்கவில்லை. அல்லது கண்டும் காணாமல் இருக்கின்றதா? என்ற கேள்விகளும் எழுகின்றன.

பட்டிப்பளை, வெல்லாவெளி மற்றும் வாகரை பிரதேசங்களிலும் மேய்ச்சல் தரை பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. அவற்றுக்கான செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. அது தொடர்பில் இந்த வரவு செலவுத் திட்டத்தில் எந்த திட்டங்களும் முன்வைக்கப்படவில்லை.

இதேவேளை அரசியலில் தமிழ் மக்கள் உங்களுக்கு வாக்களித்ததை போன்று தமிழ்த் தேசிய உணர்வுக்காக எங்களுக்கும் வாக்களித்துள்ளனர். வடக்கு மற்றும்  கிழக்கில் அதிகளவான மக்கள் தமிழ்த் தேசியத்திற்காகவே வாக்களித்துள்ளனர். இதனால் இந்த அரசாங்கம் மாகாண சபைகள் தேர்தலுக்கான நிதியை மாத்திரம் ஒதுக்கியுள்ளதாக கூறிவிடாது இதய சுத்தியுடன் ஆகக் குறைந்த தீர்வாக இருக்கின்ற சகல அதிகாரங்களையும் கொண்ட மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடத்தில் நடத்தி முடிப்பதற்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மை அங்கம் வகிக்கின்ற உங்கள் கட்சி முன்னெடுப்புகளை செய்ய வேண்டும் என்று கோருகின்றோம் என்றார்.