2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளில் 20 சதவீதமானவை மாத்திரமே நிறைவேற்றப்பட்டுள்ளன. கல்வி,சுகாதாரம் உட்பட அத்தியாவசியமான துறைகளுக்கு ஒதுக்கியுள்ள மானியத்தை முழுமையாக விடுவிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவெல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
பொருளாதார நெருக்கடியில் வங்குரோத்து நிலையடைந்த, அத்தியாவசிய பொருட்களுக்காக மக்கள் வரிசையில் இருந்த நாட்டையே பொறுப்பேற்றோம் என்று நீதியமைச்சர் குறிப்பிடுகிறார். மக்களை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டு இவ்வாறு கருத்துக்களை தெரிவிப்பதையிட்டு நீதியமைச்சர் வெட்கமடைய வேண்டும்.
ஸ்திரமடைந்த பொருளாதாரத்தையே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொறுப்பேற்றார்.இந்த ஒரு வருட காலத்தில் பொருளாதாரம் எந்தளவுக்கு முன்னேற்றமடைந்துள்ளது. பொருளாதார மீட்சிக்காக கடந்த அரசாங்கம் செயற்படுத்திய திட்டங்களையே இந்த அரசாங்கம் செயற்படுத்துகிறது.
ஆகவே மக்களுக்கு ஏதும் தெரியாது என்று நினைத்துக் கொண்டு தொடர்ந்து பொய்யுரைக்க வேண்டாம் என்று ஆளும் தரப்புக்கு குறிப்பிட்டுக் கொள்கிறேன்.
76 ஆண்டுகால அரசியல் கட்டமைப்பை விமர்சித்து தான் இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். ஆட்சிக்கு வந்து எந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். ஒன்றுமில்லை. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்து நீண்ட உரையாற்றினார். கல்வி, சுகாதாரம், விவசாயம், போக்குவரத்து உட்பட பல துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளில் 20 சதவீதமானவை மாத்திரமே நிறைவேற்றப்பட்டுள்ளன. கல்வி, சுகாதாரம் உட்பட அத்தியாவசியமான துறைகளுக்கு ஒதுக்கியுள்ள மானியத்தை முழுமையாக விடுவிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு நேரடியாக நிவாரணம் ஏதும் வழங்கப்படவில்லை. அழகான வார்த்தைகள் மாத்திரமே வரவு – செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை அரசாங்கம் அடுத்த வருடமேனும் செயற்படுத்த வேண்டும் என்றார்.



