இணையத்தையும், சமூக ஊடகங்களையும் பயன்படுத்தும்போது நிதி மோசடிகள் குறித்து அவதானமாக செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவு நேற்றய தினம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இணையத்தளங்கள் மூலமாக நடைபெறும் மோசடி நடவடிக்கைகள், குறிப்பாக டெலிகிராம்,வாட்ஸப் போன்ற கணக்குகள் மற்றும் பிற சமூக வலைத்தளக் குழுக்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் நிதி மோசடிகள் குறித்து தொடர்ச்சியாக முறைப்பாடுகள் பதிவாகி வருகின்றன. இவ்வாறான சம்பவங்களில், மோசடியாளர்கள் பொதுமக்களை ஏமாற்றி அவர்களது வங்கி கணக்கு எண்கள், கடவுச்சொல் , கியூஆர் குறியீடுகள் போன்றவற்றின் மூலம் ஒன்லைன் வேலைகளைப் பெற்றுத்தருவதாக கூறி பல்வேறு கணக்குகளுக்கு பணம் செலுத்தும்படி வலைதளத்திலோ, பயன்பாடுகளிலோ நிதி மோசடிகளில ஈடுபடுவதாக அறியமுடிகின்றது.
சமீப காலங்களாக குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகவும் உயர்கல்வி வாய்ப்புகள் ஏற்பாடு செய்வதாக கூறி நபர்களை ஏமாற்றி பாரிய அளவிலான பண மோசடிகள் நிகழ்படுவதைப் பற்றி முறைப்பாடுகள் அதிகமாக பதிவாகுவதை அவதானிக்க முடிகின்றது. இந் நிலைமை அதிகமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது பதிவாகி வருகின்றன. ஆகையால், இணையத்தைப் பயன்படுத்தும் போது இத்தகைய மோசடிகள் தொடர்பாக எச்சரிக்கையாக செயல்படுமாறும், வெளிநாட்டுச் சேவைகள் அல்லது வேலைவாய்ப்புகளுக்கான வாய்ப்புகளை ஏற்பதற்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் போன்ற பதிவு செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ அமைப்புகள் மூலம் மட்டுமே உறுதிசெய்யப்பட வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுவதோடு, இணையத்தளத்தை உபயோகிக்கும் போது பின்வரும் விடயங்கள் தொடர்பாக அறிந்து எச்சரிக்கையாக செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகின்றனர்.
சமூக ஊடகங்களான டெலிகிராம்,வாட்ஸப் பாவனைகளில் தெரியாத நபர்கள் அல்லது தெரியாத சமூக ஊடகங்களின் ஊடாக பல்வேறு ஆதாயத்தினை பெற்றுத் தருவதாக குறிப்பிட்டு மேற்கொள்ளப்படும் மோசடிகளின் தூண்டுதல்களுக்கும் மற்றும் அதன் செயல்களுக்கும் ஆளாகாதீர்கள். அறியாத நபர்கள் மற்றும் சமூக ஊடக அமைப்பு குழுக்கள் ஊடாக இடுகையிடும் இணைய நீடிப்புகள் மற்றும் ஸ்கேன் குறியீடுகளை பாவிப்பதை தவிர்க்கவும். அறியாத நபர்களின் கணக்குகளுக்கு நிதி பரிமாற்றம், உங்கள் வங்கி தகவல்களை பகிராதீர்கள், மேலும் உங்கள் வங்கி கணக்குகளை மற்றவர்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்காதீர்கள். உங்கள் கணக்கு எண்கள், கடவுச்சொற்கள் அல்லது ஒரிபி குறியீடுகள் என்பவற்றை எக்காரணம் கொண்டும் யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அறியாத நபர்கள் வழங்கும் மொபைல் பயன்பாடுகள் (apps) அல்லது இணைய இணைப்புகள் (links) பதிவிறக்கம் செய்யும் போது கவனமாக செயற்படுங்கள், உங்கள் சாதனத்தின் அணுகல் அனுமதிகளை வழங்காதீர்கள்.
இவ்வாறான நிதி மோசடிகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில், ஊடக நிறுவனங்கள் ஊடாக பொதுமக்களை தெளிவுப்படுத்துமாறு இலங்கை பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



